பெண்ணின் பெருமை
பெண்ணின் பெருமை
மண் பார்த்து நடக்கும் பெண்ணே, உன் பெருமையை
எண்ணி, வானுலகும் தரையிறங்கும் கீழே,
அன்பெனும் அலைகளை ஆரவாரமாக வீசி பேசுகிறாய்,
பூவெல்லாம் உன் சிரிப்பே, காற்றெல்லாம் உன் இசையே,
மழையெல்லாம் உன் கருணையே,
நதியின் கீதமெல்லாம் உன் கொலுசின் பிரதிபலிப்பே!
உன் பொறுமைக்கு இந்த பூமியும் ஈடாகுமோ? அடடா!
பூமித்தாய் என்பவளும் நீயல்லவா!
நத்தைக் கூட்டில் சுருங்காதே பெண்ணே, நீ
ஆள்வதற்கு மண்ணுலகும், விண்ணுலகும் தவம் கிடக்கிறது.
உன் அருமைத் தெரியா பித்தர்களின் சொல் விழுந்து சிறகை சுருக்கிக் கொள்ளாதே,
மண் சிறக்க வந்த மங்கை நீ, வாழ்வு சிறக்க உன் சிறகை அடித்துப் பற!!
தியாகச் சுடர் நீ, எனினும் உன் தனித்தன்மையை விடலாகாது.
பாரதி கண்ட புதுமைப்பெண், நீ பயப்படலாகாது!
பாதுகாப்பை பிற
ரிடம் தேடாய், உன்னுடைய அரணாய் நீயே மாறுவாய்!
துணிவிற்கென்று புது இலக்கணம் எழுதுவாய்!
வா, உன் தடைகளைத் தாண்டு, உன் இலட்சியத்தைக் கையிலெடு,
குனிந்தது போதும், வீறுகொண்டு நிமிர்ந்து நட.
கல்வியால் அறிவுச் சுடர் ஏற்றி, அறியாமை என்னும் இருளை வீழ்த்து.
நீயே சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் இந்த உலகையே உன் பிரகாசத்தால் ஒளிமயமாக்கு!
உன்னால் முடியாதது என்பது கற்பனையில் கூட இல்லை.
கண்மணியே, உன் திறமையால் வான் வீதிகளையும் பறந்து வென்றிடு.
அந்த வானமும் உன்னை அண்ணாந்து பார்க்கட்டும்!!
பொன் போன்ற கரங்கள் பூமியாளட்டும்!!
அடுப்பறை ராணி இனி அகிலம் ஆளட்டும்!!
வளையணிந்த கைகள் வீரத்தை எடுத்துரைக்கட்டும்!!
சாமானிய பெண்ணும் சாதனைப் பெண்ணாக மாறி சரித்திரம் படைக்கட்டும்!!!