இறைவா! ஒரு வரம் கொடுப்பாய்...
இறைவா! ஒரு வரம் கொடுப்பாய்...


இராமேஸ்வரத்தில் பிறந்து.....
இளம் வயதிலேயே பல இன்னல்களை அடைந்து...
இடைவிடாத கடும் முயற்சியினால்.....
தன்னம்பிக்கையை ஊன்றுகோலாக்கி...
உழைப்பினை உரமாக்கி....
சோதனைகளை சாதனைகளாக்கி....
இந்தியாவின் இலக்காகி நின்றாய்!
இஸ்ரோவின் விளக்காகி ஒளிர்ந்தாய்!
செயற்கைக்கோளின் தந்தை ஆனாய்...
செயற்கைக் காலில் விந்தை செய்தாய்!
அணுகுண்டு வெடித்துக் காட்டி அயலாரையும் அதிர வைத்தாய்!
இளைய சமுதாயம் வளர்ச்சி பெறவே....
இந்தியாவெங்கும் எழுச்சி ௨ரை ஆற்றினாய்!
இராமேஸ்வரம் மட்டுமின்றி....
இமயம் முதல் குமரி வரை....
உன் பாதம் பட்ட இடங்களும் புனிதமாயின!
நாடு பிழைக்கவும்.... காடு செழிக்க வும்
நல் யோசனைகள் பல நல்கினாய்!
ஆட்சிப்பீடத்திலும்..... காட்சி வேடத்திலும்
எளிமையை நாடினாய்!
ஆபத்துக்களை கடக்க ச் சொன்னாய்...
துன்பங்களை சகிக்க சொன்னாய்.. தோல்விகளைத் தாண்டச் சொன்னாய்... நாள்தோறும் செய்திகளை வாசிக்க நாளிதழை விற்றாய்!
வறுமையையும் பொறுமையுடன் சகித்து...
வாழ்வில் புகழின் உச்சத்தை அடைந்தாய்!
இந்தியாவையும்... இளைஞர்களையும்.....
கனவு காணச் செய்தாய்!
கண்ணிமைக்கும் நேரத்தில் கனவாய் நீ மறைந்தாய்!
இதழ் கூறும் மொழி கேட்கவும்....
விரல் காட்டும் வழிச் செல்லவும் ....
எண்ணியிருந்த வேளையில்....
தலைப்புச் செய்தியில் நீ நின்றாய்!
மரண தண்டனையை ஒழிக்க நினைத்த உமக்கு...
மரணமே தண்டனையா?
அக்னிச்சிறகுகளை எமக்கு விரித்துக் காட்டிய நீ...
எங்கே பறந்து சென்றாய்?
மண்ணுலகைத் தாண்டி விண்ணுலகையும் ஆண்டாய்!
இனி எவ்வுலகை ஆள இவ்வளவு அவசரம்?
84 அகவை யிலும் என் மகன் இடையறாது உழைத்தது போதும் என்று உன் தாய் அழைத்துக் கொண்டாரோ?
காலத்தை வென்ற உமக்கு அந்த காலனை வெல்ல மனதில்லையோ?
ஓய்வுக்கே ஓய்வு கொடுத்து ஓயாமல் உழைத்தாய்!
காலத்தின் வேகத்தை மிஞ்சத் தெரிந்த உமக்கு...
காலனின் வேகத்தை மிஞ்ச வேகம் கிட்ட வில்லையோ?
உம் காந்த விழிப் பார்வை எங்கே?
உம் சாந்த மொழிக் கோர்வை எங்கே?
உம் கூரிய சிந்தனையும்...
நேரிய நோக்கும் போனதெங்கே?
மதங்களை கடந்த மனிதன் நீ....
எம் மனங்களை வென்ற புனிதன் நீ!
ஆண்டுகள் பல ஆனாலும்.....
யுகங்கள் பல கழிந்தாலும்....
உம் புகழ் நிலைத்திருக்கும்!
நீ ஊன்றிய விதைகள் காடுகளை மட்டுமல்ல.....
வீடுகளையும் செழித்து ஓங்கச் செய்யும்!
அந்நாளைக் காண நீயும் ஒரு நாள் இம்மண்ணில் உயிர்ப்பாய்....
இறைவா, நீயும் அதற்கு வரம் கொடுப்பாய்!
என்றும் உம் வழியில்