தெய்வம்
தெய்வம்
உனக்குள்ளும் எனக்குள்ளும் எது உள்ளதோ...
உனக்கும் எனக்கும் இடையில் எது உள்ளதோ...
எந்த ஒன்று நாம் இல்லாமல் போனாலும் இருக்கின்றதோ...
எந்த ஒன்று வார்த்தைக்குள் அடங்காததோ...
எந்த ஒன்று எல்லா விடத்தும் நிறைந்திருந்தும் தன்னை வெளிக் காட்டாததோ...
எந்த ஒன்று பாய்மப் பொருளாய் சகலவிடத்தும் வியாபித்துள்ளதோ...
எந்த ஒன்றை ஆக்கவும் அழிக்கவும் ஆகாதோ...
எந்த ஒன்று ஆக்கல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளுதல் என மாயாஜாலம் காட்டுகின்றதோ...
எந்த ஒன்று சாட்சியாக இருந்து கொண்டு பிரபஞ்ச நாடகத்தை ஆட்டுவிக்கின்றதோ...
எந்த ஒன்று கர்ம பந்தங்களை உட்பகுத்தி தான் அவற்றால் பாதிக்காமல் இருக்கின்றதோ...
எந்த ஒன்று மனித இனத்திற்குள் சுடர் விட்டு பிரகாசிக்கின்றதோ...
எந்த ஒன்று மனித இனத்தால் எளிதில் அடைய முடியாது இருக்கின்றதோ...
எந்த ஒன்று தியானம் தவம் முதலியவற்றால் உணரப் பெறுகின்றதோ...
எந்த ஒன்று சிலையிலும் சிலுவையிலும் திசையிலும் கேட்டவருக்கு கேட்ட வண்ணம் காட்சி கொடுக்கின்றதோ...
எந்த ஒன்று இயங்காமையில் இயக்கத்தை நடனம் செய்கின்றதோ...
எந்த ஒன்று சுத்த வெளி பாழ் அருட்பேராற்றல் அருட்பெருஞ்ஜோதி சிதம்பரம் அல்லா பரம பிதா எனப் பல பெயர்களால் அழைக்கப்பெறுகின்றதோ...
எந்த ஒன்று சிவம் சக்தி விஷ்ணு பிரம்மா கணபதி முருகன் சூரியன் என தனது இயல்பின் சிறு தன்மைகளாக வெளிக்காட்டுகின்றதோ...
எந்த ஒன்றை வேதங்கள் தாள் பணிந்து விவரிக்க முடியாது என்று அடி பணிகின்றதோ...
எந்த ஒன்று எண்ணிறந்த வடிவங்களாய்த் தன்னை விரித்துக் காட்டுகின்றதோ...
எந்த ஒன்று தொடர்ந்து விஸ்வரூபம் எடுத்துக் கொண்டு இருக்கின்றதோ...
எந்த ஒன்றால் ஆவது ஒன்று இல்லை என்று இருக்கின்றதோ...
எந்த ஒன்றின் புரிதல் இல்லாமல்
மனித மனங்கள் தமக்குள் வேற்றுமை பாராட்டுகின்றதோ...
எந்த ஒன்று தன்னை உணர்ந்தவனை தனக்குள் ஐக்கியப் படுத்திக் கொள்கின்றதோ...
அந்த ஒன்றை... தெய்வம் என்று கூறலாகுமோ?!!?
நன்றியுடன்...MK🎶🕊️