வாடகைத் தாய்
வாடகைத் தாய்
வாடகை இல்லாத வீட்டிற்குள்
வாழ்க்கை வாசம் செய்ய
வரமோ சாபமோ
வந்து பிறந்தோம் இப்பூமியில் !
சொர்க்க நரகங்களின் கலவையாக...
சந்தோஷம் சங்கடங்களின் பிணைப்பாக ...
நிமிடத்திற்கு நிமிடம்
வண்ண வண்ண
வாழ்க்கைக் கோலங்கள்- பூமி எனும் விந்தை உலகில் !
நிரந்தரமில்லை என்று தெரிந்தும்
நிலை என்று ஏமாறி
நிலை மாறி தடுமாறி
வழிமாறி வாழ்வது
பூவுலக ரகசியமோ?
வாடகைக்கு ஈடாக
வாழ்க்கையே ஈடிங்கு...
வளங்கள் கொட்டிக் கிடந்தும்
வறுமையும் கொட்டிகிடக்கும்
அவலம் மனித சாதனை ?!
அளவீடுகள் இல்லாத பரப்பு
அதுவே புவியின் சிறப்பு...எனினும்
எல்லைக்கோடுகள் வரைந்து
யாருக்கும் சொந்தம் அற்ற நிலத்தை
எனது உனது என உரிமை கொண்டாடி
வாழத் தெரியாமல்
வாழ்வு முடிவது ஆகச் சிறந்த நடிப்பு !
நிலத்தை சூறையாடி
நீர் வளத்தை வேட்டையாடி
காற்றை மாசுபடுத்தி
தனக்குத் தானே நெருப்பினை
மூட்டும் ஆளுமையை
ஆறாம் அறிவு என
எந்தக் கல்வி உரைத்ததோ ?!
ஓ! கற்பக் கிரகமே...
உனக்குள்ளே தான்
எங்களின் வாழ்வும் முடிவும்...
மன்னித்து அருள் செய்...தாயே !
இருப்பை மேம்படுத்தி
இயற்கை வளங்களை பாதுகாத்து
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பி
ஒற்றைக் குடும்பமாய்
ஒருலக ஆட்சி கொண்டு
சமத்துவ சமுதாயம் வேரூன்றி
இயற்கை அளித்ததை
பூவுலக நன்மைக்கென பயன்படுத்தி
பூமித்தாயின் மக்களாய் உறவு கண்டு
தன்னிலை தெளிந்து
தான் வந்த காரணம் அறிந்து
மரணமிலாப் பெருவாழ்வு
வாழ வகை காண்பதெப்பொது?! - என்
வாடகைத் தாய் மகிழ்ந்திருப்பதும்
எப்போது?!
நன்றியுடன்...
MK🕊️🎊
