STORYMIRROR

Ahamed Thippu Sultan TK

Abstract

5  

Ahamed Thippu Sultan TK

Abstract

தப்பிச்சேன்!

தப்பிச்சேன்!

1 min
235

கர்ப்பத்தில் இருக்கையில்  

எள்ளுக்கு தப்பிச்சேன் 

கைக்குழந்தையாக கள்ளிக்குத் 

தப்பிச்சேன் 


பெண்பிள்ளை நீ என்று 

சொல்லியே கொல்லும் 

கொல்லிக்கட்டைச் சொல்லுக்கு  

நாளெல்லாம் தப்பிச்சேன் 


அல்லிப்பூ அழகி 

மல்லிப்பூ சிரிப்பி 

அச்சுப் பூ பாவாட 

உடுத்தும் ஒனக்கு 

பள்ளிக்கூடத்துப் 

பேச்சு தானெதுக்கு?


சும்மாட எடுத்துக்கிட்டு 

சுள்ளி பொறக்க வா- இப்படித் 

துள்ளித் திரியும் 

காலந்தொட்டு தள்ளி வச்சே  

எள்ளி நகையாடும் 

எகத்தாளத்துக்கு தப்பிச்சேன் 


பருவத்தில் நனைந்த போது 

கர்வத்தில் நிமிர்ந்தாலும் 

அருவருப்புப் பார்வைகள் 

குறுகுறுக்கக் காணயிலே 

சித்தெறும்பு மேனியில் 

அத்துமீறக் கண்டேன் 


ஆணினமே சில நேரம்

அசூசையாகும் 

அப்பனும் அண்ணனும் 

கூட அந்நியமாய்ப் போகும்  


பதின்ம வயதின் பருவ நதி 

வெள்ளத்தில் சிக்காமல் தப்பிச்சேன் 

சிதையாமல் தப்பிச்சேன் 


கலரா இருந்தா தேவல 

கருப்பால இருக்காளே  

நிறவெறி மாப்பிளைகளின் 

குத்தலுக்கு தப்பிச்சேன் 

கருப்பை தானே 

பெண்ணுக்கு அழகு 

கருப்பாய் இருந்தாலென்ன? 

சிகப்பா இருந்தாலென்ன? 


மூக்கு சப்பயா இருக்கு, 

பல்லு எடுப்பா இருக்கு, 

குள்ளமா இருக்கா; ஒத்து வராது.  

குத்திக் குத்திக் காட்டி உசுரோட 

செய்யும் பிரேதப் 

பரிசோதனைக்கு

பலியாகாமத் தப்பிச்சேன் 


கையாலாகாதவனுக்கும் 

கணக்காக் கல்யாணம் 

நஞ்சுக் கொடி வெட்டிய 

நொடிப் பொழுதில் இருந்து 

நெஞ்சுப் பால் குடித்த 

வயதில் இருந்து 

வயசு அஞ்சோட 

முப்பதாகும் வரை 

கொஞ்சம்கொஞ்சமா செஞ்ச 

செலவை எல்லாம்

வரதட்சணையா  

மனசஞ்சாமக் கேப்பாளே 

பஞ்ச மகா பாதகி, 

மாப்பிள்ளைக்குத்  

தாய் என்ற பேரில் 

தரகு வேலை பார்க்கும் 

நவீன நரகாசுரி, அவளிடம்  

இருந்து நல்லவிதமா தப்பிச்சேன் 


கல்யாணமாகி நாலு வருஷமாச்சு 

புள்ள புடி குஞ்சு 

ஒண்ணுங் காணோமே  

என்ன கோளாரோ 

எதுல கோளாரோ 

யாரு செஞ்ச பாவமோ என்று 

பின்னால பேசிவிட்டு  

முன்னாடி வந்து நின்னு,

 “மருத மேல மாசி வீதியில 

ஆலமர சந்துக்குள்ள 

பேரு போன வைத்தியரு 

காலங்காலமா பாக்குராரு  

மூணு மாசம் பாரு 

நாலாவது மாசம் 

முழுக மாட்ட” என்று  

சொல்லும் கர்ப்பப்பை 

கிளரும் வஞ்சக  

நாக்குக்குத் தப்பிச்சேன்


ஆணாதிக்கம் செஞ்சு வச்ச 

செய்வினையால  

ஆதியிலிருந்து மங்கையர் 

படும்பாடுகளில் இருந்து தப்பிச்சேன் 


கற்பென்ற நீதி 

பெண்ணுக்கு மட்டும் தான்  

கண்ணகிக்கு எப்போதும் 

கோவலன்தான் 

சீதை எப்போதும் 

தீக்குளித்துச் சிதையத்தான்  

மாங்கல்ய முடிச்சு மூணிட்டு 

மங்கையர்க்கு மட்டும் 

மட்டின்றி மட்டுகளை 

அவிழ்த்துவிட்டு, 

‘குடிகாரப் புருஷன 

அனுசரிச்சாப் புண்ணியம் 

சூதிலே உன்னை தோற்றாலும்

அவனுனக்கு தர்மன் தான் 

தர்மத்தின் தலைவன் தான்’  

என்ற பத்தாம் பசலித்

தனத்திலிருந்து தப்பிச்சேன் 


மாமியார் கொடுமயில்ல

நாத்தனார் நச்சரிப்பில்ல 

சக்களத்தி சண்டையிட  

சண்டாளி யாருமில்ல 

சுமங்கலியுமில்ல சுமக்கவுமில்ல  

சமையவுமில்ல அமங்கலியுமில்ல 

பிள்ளையுமில்ல தொல்லையில்ல 

மாருல பால்கட்டு மில்ல 

மயானத்தில் மல்லுக்கட்டு மில்ல 

மகராணியுமில்ல 

மருதம்மாளும் இல்ல 


பொறந்தாலே பொல்லாப்புதான் என்று  

பொறக்காமலே தெரிஞ்சுகிக்கிட்டேன்

அதனால்  

மகராசி நான் இன்னும் 

மண்ணில் வந்து பொறக்கலயே!


Rate this content
Log in

Similar tamil poem from Abstract