ஒரு தாயின் கண்ணீர்
ஒரு தாயின் கண்ணீர்


தன் மடி சேர்ந்த வித்தினை
பத்திரமாய் தன்னுள் கொண்டு
கண்ணின் மணியெனக் காத்து
தான் சுமந்த கிள்ளையை
பிரசவிக்கும் அன்னையென
விதையது துளிர்த்து
செடியாகி மரமாகி
பெரும் விருட்சமாகி
உயர்ந்து நிற்கையிலும்
கால்பதித்து வேரூன்றி நிற்க
தன் மடிதனில் இடமளித்து
உணவாம் நீரினை
வேர் உறியும் முன்னர்
தான் உறிந்து ஊட்டிடும்
அன்னையவளின் பெருந்தன்மை
கிள்ளையாம் மரத்திற்கும்
வாய்த்திடாதோ ?
ஓரறிவு முதல்
ஆறறிவு வரை
அ
னைத்து மண்ணுயிருக்கும்
உணவு முதல் இருப்பிடம் வரை
வழங்குவதோடு நில்லாது
உயிர்வளி வழங்கி
வாழ்வாதாரமாய் மாறிப்போன
மரக் கிள்ளையை
ஈவிரக்கம் இன்றி
சிரச்சேதம் செய்து
அவர்தம் அன்னையாம்
பூமித் தாயின் மடிதனில்
வீழச் செய்யும்
கொடூர மனம் படைத்திட்ட
மாக்களுக்கு - என்ன
தண்டனை வழங்கியே தன்
இரணமான மனத்திற்கு
ஆறுதல் தேடிக் கொள்வாளோ
பூமித் தாயவள் ?
தயாராகவே இருப்போம்
பாவத்தின் சம்பளத்தை
பெற்றுக் கொள்ளவே !