STORYMIRROR

Ahamed Thippu Sultan TK

Abstract

5  

Ahamed Thippu Sultan TK

Abstract

மாவீரன் பாரதி!

மாவீரன் பாரதி!

2 mins
703

பாரதிரச் செவ்வுதிரம் தீகலந்து பாவடித்த மாவீரதீரப் பாரதியே! உன்

மாருதிர்த்த தமிழ்க்கவி யாகும் புவிதான் வெடித்த எரிமலைகள்!

மாநதிகள் நகர் நாகரீகத் தொட்டிலாம்; உன் பாநதிகள் புதுக்கவிதை வளர் தொட்டிலாம்!

மாவீரன் பாரதியே!

மதனம்பு பாய்ந்து வீழ்ந்த காதலர்க்கு உன் தேனுதிர் பா ரதியே!

செந்தீயின் சேயுன் சேனைத் தமிழது பாயின் மாயும் மடமூடத் தனங்கள்!

பழம் பேயின் சாத்திரம் சாய்த்த நல் வீரனே! கிழ நாயின் வால் நிமிரா

தாயின் உன் வாக்கின் வாள் கொண்டறுக்க திமிரங்கடங்குமே!

பாகவதர் மட்டுமே பாட வென்று வைத்திருந்த பகட்டுப் பாடல் இலக்கணக் கட்டவிழ்த்தாய்

பாமரர் கூட பாடிப் பயின்றிட இலக்கியக் காட்டுக்கு புதுப் பாதை வகுத்தாய்

ஆசை காமம் ஆபாசக் களி இன்பம் பாடும் பாஷை தமிழ் என்றிருந்த போதில்

மீசை வளர்த்தாய் உனக்கும் தமிழுக்கும்!

முண்டாசுக் கவிஞனே !

தமிழ் நீசம் விரண்டோடியது உன் பேராண்மைக் கவிதையால்!

தலைப் பாகை நீ சூடினாய்! தமிழ்த்தாய் வாகை சூடினாள்!

  நாட்டு விடுதலைக்கு முன் தமிழ் பாட்டு விடுதலையானது உன் வீரத் தமிழாலே!


குழந்தையைப்பாடினால் நீயோருகுழவி! கொஞ்சிக்குலவும் குமரிக்குப்பதமாய் சமைந்திடுமுன் கிளவி!

குமரி தொட்டு வேங்கடம் வரை கொட்டும் தமிழருவி! பாமரரையும் அமரராக்கும் ஐம்புலன் தொட்டுத் தழுவி!

  மாவீரனே!

நீ பைந்தமிழ் தேர்ப்பாகன்! பாரம் பல சாத்திரமாய் தேரினிலே தேங்கி நிற்க அதி

காரம் சதி சூத்திரத்தால் புரவிகளின் புஜமுடைக்க – மதிச் சாரம் கொண்டு தோத்திரம் பாடி போர்த் தொழில்செய்து தேர்த்திறம்பட செலுத்திய வித்தகச் சாரதி நீ!

சட்டங்கள் உடைத்தெறிந்த துன் பாடல்;சதி சடங்கு சம்பிரதாயம் உடைத்த துன் பாதை

உன் ரௌத் ராக்னியில் பழமையின் சாம்பலும் எரிந்ததே!

காசியின் தாசன் நீ!செத்துப் போன பத்தாம் பசலித் தனங்கள் எரிய நீயே வாரணாசி

ஆனாயோ!

வீரத் தமிழ்ச்சிங்கமே!

கலகச் சிங்கமானாய்! பூணூல் அறுத் தெரிந்தாய்! கனக லிங்கங்களுக்கு பூணூல் அணிவித்தாய்!

திலகத்தீயை நெற்றியில் இட்டுக்கொண்டாய்!விலகிப் போனது விதிவகுத்த சதியெல்லாம்!

கழுதைக் கன்று- நீ கொஞ்சும் பிள்ளை! பழுது மண்டிய சாதி உன் உலகினில் இல்லை!

அழுதியாரேனும் உனைக்கடக்கக் காணின் அவ்வழுகைதீராமல்  உனைக்கடந்து  போனதில்லை!

ஆம்! எட்டய புரம் தந்த எட்டாம் வள்ளல் நீ!


பத்திரிக்கை! ஒன்றைப் பத்தாய் திரிக்கும் கை தான் பத்திரிக்கை

உன் கையில் பத்திரிக்கை ஆனது பத்திரகாளி

உண்மையின் ஒத்திகை உன் பத்திரிக்கையில்!

பத்திரம் போல் உண்மைக்கு உயில் எழுதிய மித்திரனைக் கண்டதும்

உயிர் பத்திரமாய் இல்லை; ஆம் சத்ருக்களின் உயிர் பத்திரமாய் இல்லை

நீ எழுதிய ஒவ்வோர் எழுத்தும் சுட்டெழுத்து தான்! அந்நியனைச் சுட்ட எழுத்துதான்!

பாரதியே! உன் செஞ்சீற்றம் வடித்தெழுதிய உரை நடை மையாலே

வடசொல்லால் எழிலிழந்த தமிழ் மொழியை ஞானஸ்நானம் செய்த மாவீரப்பாதிரி நீ!

                              மாவீர மாமுனிவன் நீ !


வீர மானவன் பாரதி! வீரத்தின் மாணவன் பாரதி!

உன்னிடம் இல்லத்தாள் செல்லம்மாளுக்கு மல்லிப் பூச்சரம் இல்லை  

இதயத்தாள் கண்ணம்மாளுக்கு கனவில் வர நீ துயிலவில்லை

உதயத்தின் உலா கிழக்கைத் தொடும் முன்னே உன் கரம் பற்றிப் இதழ்

           பாடுவாய் ஷெல்லியை கீட்சை பள்ளி எழுச்சி யாய்!

செல்லம்மாள் ஷெல்லிக்கு அடுத்துதான். கண்ணம்மாள் கீட்சை முடித்துதான்

வீரத் தோழர்கவிஞன் நீ! பொதுவுடைமை போற்றினாய் !

தனியொரு வனுக்கு உணவில்லையா? இச்ச கத்தினை அழி என்றாய் !

மாவீரனே! உலக விடுதலைக் கவி நீ! பெல்ஜியத் தாய்க்கும் சேர்த்து கர்ஜித்தாய்

பிரபஞ்சக் கவி நீ! பிரஞ்சுக் காரரும் உன் நெஞ்சத் தோழர் ஆனார்கள்

பிரஞ்சுப் புரட்சி உன் பாட்டிலும் வெடித்ததே! பிறதேச விடுதலைக்குமுன் இருதயம்

                                   துடித்தது!

பாரதியே! உனைப் பார்த்த சாரதி கோவில் மத யானை மிதித்த தாம்

ஆம் மத யானை மிதித்த தென்னவோ உண்மைதான். ஆனால் ஒரு முறை அல்ல

                      வாநாளெல்லாம் மிதித்தது  

மிதித்தது பார்த்த சாரதி கோயில் யானை அல்ல. எட்டய புரத்து அக்ரகார மத யானை

அர்த்தமில்லா அசட்டுச் சம்பிரதாய முறைகளுக்கு எதிராக

எடுத்து வைத்த ஒவ்வொரு எட்டிலும் எட்டி உதைக்கப் பட்டாய், முக வட்டில்

                             மிதிக்கப்பட்டாய் !

மனதால் எப்போதோ செத்து விட்டாய் மனிதர் குணங்கண்டு

யானை மிதித்த தென்னவோ என்புதோல் போர்த்த உடம்பு தான்!

மாவீரனே!

நல்லதோர் வீணை நீ உனை நலங்கெடப் புழுதியில் எறிந்தோம்!

நீ தீக்குழந்தை உன் உஷ்ணம் உதிர்த்த வார்த்தை வார்ப்புகள்

பொன்னென்று அறிய பொறுப்பில்லை எமக்கு!

உனைக் காத்து வளர்த்திட துப்பில்லை

வீதி எங்கும் பாழும் பழவிதியால் ஆழ்துளைக் கிணறு தோண்டி உனை உயிரோடு

                                   புதைத்தோம்!

மாவீரப் புலவா! எம் மாபாவம் மன்னிப்பாயோ!



Rate this content
Log in

Similar tamil poem from Abstract