கோட்டோவியம்
கோட்டோவியம்


அரைவட்டக் கண்ணாடியும்,
அதனோடே சாய்ந்த
கைத்தடியும்
அண்ணலின் கோட்டோவியம்....!!
பூமுடிந்த கூந்தலின்
ஒற்றை வகிடும்,
அதில் தவழும்
மழலைப் பூச்செண்டும்
அன்னையின் கோட்டோவியம்...!!
உச்சியில் ஒளிரும் சுடரும், உயர்ந்து நிற்கும்
மலைமுகடும்
அருணையின்
கோட்டோவியம்....!!
ஆழியும், ஆனையும்,
அதனருகே
உயரொளி விளக்கமும்,
கடல்மல்லைக் கோட்டோவியம்...!!
முழுமதியின் தண்ணொளியில்,
மின்னெழில் பெருங்கற்றளி
தமிழ்த்தரணி போற்றும்
சோழபுரக் கோட்டோவியம்...!
நெடிதுயர்ந்த
கோபுரமும்,
நீரமர்ந்த தாமரையும்,
வைகயம்பதி
கோட்டோவியம்...!
அயர்ந்துறங்கும்
மழலை முகத்தொளிர்
அழகான குறுநகையோர்
அற்புதக் கோட்டோவியம்...!
இயங்குநிலை மானிடரின்
மனத்தூறும் நினைவலைகள்
மாற்றவொண்ணாக்
கோட்டோவியம்...!
முழுமை நெசவறியா
ஓவியத் தூரிகையில்
முதலில் நெய்திட்ட
முந்தானை என்
கவிதைக் கோட்டோவியம்!!