மானுடம் வெல்லும்!!
மானுடம் வெல்லும்!!


நடைபாதையில் நகர்கிறது சிலர் வாழ்வு...
வணிகத்தின்
பெருந்தளம் இது...
இங்கே பெரும்பாலும் பெண்கள்... மூப்பில் பலர்...
விரித்து வைத்ததோர்
ஒற்றைச் சாக்கில் பறித்து வந்ததோர் கற்றை உழைப்பு... அருகாமை அம்மா உணவகத்தில் அளவான சாப்பாடு
அவ்வப் போது தாகம் தீர்க்க
அருகே நசுங்கி போனதோர் நெகிழிக்குப்பி ...
குடிக்கவும் அதுவே, கொப்பளிக்கவும் அதுவே, இயற்கைக்காக ஒதுங்கவும் அதுவே...
ஆதவன் ஏறும் போதும் மழைக் கன்னி இறங் கும் போதும்
பூவாய்த்தலை மலரும் ஒற்றைக் குடை. ஆங்காங்கே தையல்களோடு!
ஆணவக் காவலர் தென்படும் போது
கடை சுருட்டும் பாவனை...மற்ற
நேரமெல்லாம் மத்தாப்புச் சிரிப்பு... முகத்தில் சோகங்களின்
வலி ரேகைகள்...
கோபம் ஒரு கணம், சோகம் ஒரு கணம், சிரிப்பு ஒரு கணம் வெறுப்பு ஒரு கணம் பேரம்பேசினால்
சட்ட நிபுணர் பேச்சு...
வாடிக்கை எனில் உரிமை விசாரிப்பு!;
வள்ளல் கைபோல அப்போது நீளும் கொசுறு. ஆளற்ற மதியத்தில் பொட்டலத்தில் பசியாற, அதற்கும் அங்கே வரும் அடுத்த கடை பங்கு...பாதி மூடிய இமைகளூடே பரிதாபமாய் அரைத்தூக்கம் ...ஆழ்ந்த யோசனையில்
ஒரு நாள் கேட்டேன்....கணவர் உண்டா?
பேசாதே அவர் பற்றி! மகன்கள் உண்டா?
அவரவர் வீட்டில்... மகள்கள் எங்கே?
மாதெமாரு முறை மறக்காமல்
தொலைபேசி...வீடு, கழனி?
அடர்ந்த பெருமூச்சு...
ஓய்வு எப்போது??
என் மூச்சு ஓயும்போது
பக்கத்துப்பையில் என்ன?
அவருக்கு மருந்து. மகனுக்கு தண்டல் பணம், மகளுக்கு மளிைகை. உங்களுக்கு?? இதெல்லாமே
எனக்குத்தாேன இது மட்டும் போதுமா??இதான் தாயி பிழைப்பு ,!!அலுக்கலியா??
அலுத்தாலும், சலித்தாலும்
வாழத்தான் வேணும்!!
துறவிகள் கூறாத் தத்துவத்தை ஒரு பாமர கீதையாய்க் கேட்டேன்!!
நடைபாதை ஓரத்தில் தன்னுயிரை
இன்னுயிராய்
மதியாது மாய்த்துக் கொள்ளும் அறிவிலிகள் ஒருமுறை நடைபாதை ஓரத்தில் நின்று பாருங்கள். அங்கே கைகோர்த்து
செல்கிறது
உழைப்பும், உண்மையும் வறுமையும்,
வாழ்க்கையும் ஓய்வறியாக்காலமும் அங்கே உபதேசம் கேட்கிறது!!
விழி நீர்த் திரை நீக்கி, கையில் காசு தந்து நகர்ந்தேன்..தாயி.... அதிகம் தந்துட்ட... உன் பணம் ஏதும் வேண்டாம், பாசமே போதும்... மானுடம் மறுபடி தழைக்கிறது. மண்வாசனை மனிதர்களோடு!!!