கவிஞன் உணர்பவை
கவிஞன் உணர்பவை
ஒரு கவிஞன்
தன் கவிதையில்
தன் சோகத்தையும்
தன் இன்பத்தையும்
நீங்கள் உணர வேண்டும் என்று கருத கூடும்.
ஆனால் அவன்
என்றும் தனக்கு ஆறுதல் தேட
தன் கவலையை
தங்களது கவலையாக மாற்றி கொள்ள நினைப்பதில்லை.
"பணப்பையில் பணமில்லாதவன்
பட்டினி இருக்க
தன் உடலை
பழக்கி கொள்கிறான்" என்றவன் எழுதினால்
அவன் உடல் நிறம்
வருமையில் சிவந்து கிடக்கிறது என்று நீங்கள் நினைக்கவேண்டும் என்பது அவனது நோக்கமல்ல.
வயிற்றில் உணவில்லா வேளையில்
ஈரத்துணி கட்டி படுத்திருக்கின்றானென
நீங்கள் நினைக்கவேண்டும்
என்பதும் அவன் நோக்கமல்ல.
>அவன் அக்கவிதைக்கு ஆமாம் என்ற சொல்லை
சிலரிடம் எதிர்ப்பார்க்கிறான்.
சிலரிடமிருந்து அடடா என்ற சொல்லை எதிர்ப்பார்க்கிறான்.
விட்டு பிரிந்த சொந்தத்திடமிருந்து
கவிதை ஒன்றை உணர்ந்தெழுதி
உங்களிடம் அவன் ஒப்படைக்கையில்,
அவன் கேட்க நினைப்பது
அக்கவிதையை வாசிக்கும்
உங்களது குரலையே.
சரியான ஏற்றம் இறக்கமிட்டு
நீங்கள் வாசித்தால் போதும்
அவன் எரிமலையின் உச்சியில்
வெந்த காலோடு நின்று கொண்டிருந்தாலும்
ஆழ் பள்ளத்தாக்கில்
கொடும் மிருங்களோடு
வாழ்ந்து கொண்டிருந்தாலும்
வண்ணத்து பூச்சியின்
முத்தமிடுதலை
தன் உடல் முழுதும் உணர்வான்.