இனிமையான பாடல்
இனிமையான பாடல்


எள்ளல் பேசி
துள்ளி ஓடும் சில் இளைஞர்களும்
ஆந்தையின் அலறலுக்கு
அச்சம் கொள்வர்.
ஆந்தையின் ஓலத்தை
இரவில் கண்விழிப்பவர்கள்
அனைவரும் கேட்டிருக்க முடியாது.
ஓர் வேளை கேட்டிருந்தால்
யாருடைய இறப்பிற்கோ
சேதி சொல்லுகிறது ஆந்தையென்று
அன்றிரவு முழுவதும்
நோய்வாய் பட்டு படுத்திருப்போர்
பட்டியலிட்டு பாதிப்பு அதிகமுள்ளோர்
முதன்மை படுத்தப்பட்டு
அவர் இறந்து விடுவாரோ என்று
கவலை பட்டும்
பாதி கண்ணை திறந்தும்
பாதி கண்ணை மூடியும்
படுத்திருக்கும் ஊர் சனம்.
குளிர் காற்று
குகையில் புகுந்ததால் தான்
கூகை அலறியது என்று
அங்கு யாரும் கூறபோவதில்லை.
குளிர் யாருடைய உடலிலோ
பரவ தான் அது அலறியது என்றுதான்
கூற போகிறார்கள்.
தான் செய்த தவறுகளை
சிலர் நினைத்து
தன் இறப்பிற்காக தான்
அது சத்தமிட்டது என்று
துடித்து போவர்களும் உண்டு.
யாருக்கும் அச்சமின்றி
எதைப்பற்றியும் கவலையின்றி
பஞ்சு மெத்தையில்
அயர்ந்து தூங்கும் ஓர் இளம்பிஞ்சுக்கு
ஆந்தையின் அலறல் சத்தம்
ஓர்வகை குருவியின்
இனிமையான பாடல் மட்டுமே.