விந்தை
விந்தை
பறந்து விரிந்த வான் வெளியில்
பார்க்கவொண்ணா விண்வெளிக் கூட்டம் ...
நிறைந்து ததும்பி சுழலும் விந்தை
யார் இயக்கும் நாடகமோ?!
இயங்கும் விண் திரளுக்கு அப்பால்
இயக்குகின்ற மறைபொருள்
நின்றுளதோ?!
நீரில் மிதக்கும் பந்துகளாய்
நிறைகொண்ட வான்பொருட்கள்
மிதப்பது எங்கனம்? சுழல்வது எங்கனம்?
மிதப்பது வலியது என்றினும்
மிதக்க வைத்து அழகு பார்ப்பது
என்னவோ?!
எழுதுகிறேன் இதனையும் மிதந்து கொண்டே... விந்தையை
என்னவென்று உரைப்பேன்?!
படைத்தலும்
படைத்த வொன்று
வாழ்வதும்
இன்பதுன்பங்களில் உழல்வதும்
இனியன நல்லன அல்லன வென்று
சொல்லொணா அனுபவங்கள் கடந்தும்
இளமையில் ஓங்கியும்
முதுமையில் தேங்கியும்
முற்றுக்கொண்டு வீழ்வதும் - பின்
மிச்சமின்றிப் போவதும்
நினைவுகளில் நிறைவதும்
மண்ணுலகில் வாழ்க்கை
கொண்ட விந்தை அன்றோ?!
யார் தரும் சுழற்சி இது...மனம்
தெளியப் பயிற்சி எது?!
உணவை உண்பவன் நான்
ஆன போதிலும் அதில்
ஏழு தாதுக்களை பிரிப்பது யாரோ ?!
ஆற்றல் தருவது யாரோ ?!
மனம் எங்குளதோ?
புத்தி யாதோ ?
அறிவு யாது வளர்ந்ததோ ?
அகங்காரம் எங்கு மறைந்துளதோ?!
எழுமைக்கும் ஏமாப்புடைத் தெனும்
கல்வி யார் தருவதோ?!
எல்லாம் அறிந்ததாய்
எழுகின்ற மாயையை
யார் அளிப்பதோ?!
வாழ்ந்து முடிந்த
அனுபவங்களாய் கடந்தகாலமும்
அனுபவங்களைத் தேடி நிகழ்காலமும்
பெறாத அனுபவங்களைப் பெற
எதிர்காலமும்
வாழ்க்கை எனும் போர்வையில்
நடத்துகின்ற விந்தையினை
என்னவென்று உரைப்பேன்?!
எனக்குள் உறையும் பேரொளியே !
உனக்குள் நிறையும் அருள் விழையே !
யாதுமாகி - சிந்தை மகிழும்
விந்தையாகி நிற்கும்
சத்தியமே !
இந்த விந்தையையும்
சிந்தையில் கொள்
சிதானந்த ரூபமே !
நன்றியுடன்
MK 🎊🕊️
