பூமித்தாய்
பூமித்தாய்


கோடிக் கணக்கான ஆண்டுகளாய்
விண்ணில் சுழலும் அதிசய
பூமியில்...
மண்ணில் பிறந்த நான்...!
எத்தனை யுகங்கள்...
எத்தனை தவங்கள்...
மண்ணில் உயிரினங்கள் வந்திட...வாழ்ந்திட...!
புயலாலும் ...
மழையாலும்...
பனியாலும் ....
நெருப்பாற்றி னாளும்...
புல்லாலும்...
புல்லினும் நுண்ணிய உயிர்வகையாலும் ....
சொல்வதற் கரிதான விலங்குகளாலும்...
மண்ணில்
மானுடம் பிறப்பெடுப்பதற்கு
முன்னம் இருந்த
போராட்டங்கள் எத்தனை ?
சரித்திரங்கள் எத்தனை ?
கண்ணிமைக்கும் நேரத்தில்
காணாமற் போன
உயிர்கூட்டம் எத்தனை ? அந்தப்
பெரும் தவிப்பிலும்...எதிர்
நீந்திக் கரை சேர்ந்த
வல்லுயிர்கள் எத்தனை ?
இது எனது ராஜாங்கம் என
மார்தட்டின சாம்ராஜ்யங்கள்
மண்ணிலே
மணித்துளியிலே - பூமித்தாயின் மடிமீது
கண்ணயர்ந்த வேளைகள்...
வேதனைகள் தான் எத்தனை?
பாவம் அல்லவா....நம்
பூமித்தாய்...!
பெற்றவளுக்குத் தானே
தெரியும் வலியும் வேதனையும்...
ஒவ்வொருமுறை
ஜனமும் மரணமும்
தனக்குள்ளே நிகழ்கின்ற ப
ோது...!ஆழ்ந்த அனுபவங்களின்
பல்கலைக் கழகமாய்...
அனுபவத்தால் முதிர்ந்த
கன்னியாக...
அமைதி பொறுமை
விடாமுயற்சி வீரம்
பணிவு துணிவு என
நம் கண்ணுக்குத் தெரியாமல்
நம்மை சுமக்கிறாள் நம்
பூமித்தாய்...
நிற்காமல் சுழல்கிறாள் நிதமும்... அத்தனையும் மறந்து
அந்தந்த நொடியில் வாழ்கிறாள்...
கடமையே கண்ணாக
காலச் சக்கரத்தில்...!
மண்ணில் இந்த
மானுடம்
உனக்குத் தீங்கிழைத்து
பயணிக்கிறது - சுயநலம்
கொண்ட விலங்குகளாய்...!
காடுகள் நதிகள் பறவை
விலங்குகள் என
எதனையும் விட்டு வைக்காமல்
வேகமாக ஓடுகிறான்
மனித வேடன்...வினை விளைவு
அறியாமல் புரியாமல் ...
மீண்டும் ஒரு புதிய யுகத்துக்கு
உன்னை அழைத்துச் செல்ல...!
உன் மீது கால் வைத்து பயணிக்கிறேன்
தாயே... மன்னித்து அருள் செய்...
உன் மகனாக
உன்னை முத்தமிட்டு
மகிழ்கிறேன்...
என்னை பெற்றதற்கும்
என்னையே உன்னில் கரைய வைப்பதற்கும் சேர்த்து....!
வாழிய உன் புகழ் பல்லாண்டு !
நன்றியுடன்
MK