பூக்கள்
பூக்கள்
நாங்களெல்லாம் விண்மீன் துகளாய்
நீ மட்டும் வானவில் துகளாய்
இயற்கையின் ஓரவஞ்சம்
நிறங்களெல்லாம் உன் தஞ்சம்
என்ன கொடுத்தாய் லஞ்சம்?
முரைக்கும் மொட்டுக்களே
வண்டுகளுக்கு நீ “பார்” (Bar)
வண்ணம் திறந்து பார்
இதழ் முழுக்கத் “தேன்”
இருந்தும் மூடியதேன்?
மகரந்த சேர்க்கைக்கு
சுரந்து வடித்தாய்- நீ
எண்ணெய் திரவியம்
குளிக்காமல் மணக்க
சுரண்டி எடுத்தோம் - உன்னை
வாசனைத் திரவியம்
ஆறாம் அறிவின் மணக்கும் பீத்தல்கள்
காரி உமிழ்ந்த மலரின் எச்சங்கள்!
கர்பத்திற்கு குங்குமப்பூ பால்
வளைகாப்பிற்கு மகிழம்பூ ஜடை
பெற்றெடுத்தால் மல்லிப்பூ தொட்டில்
தாலாட்டிலோ தாமரைப்பூ அடி
ஆட்டோ மட்டுமல்ல
நம்மூரில் பூக்களும்
இலவசம் பிரசவத்திற்கு!
காதல் காணாத
ரோஜாக்களும் இல்லை
முள் குத்தாத
காதல்களும் இல்லை
காதலைச் சொல்லியே
வெட்கிச் சிவந்தன
ஒற்றை ரோஜாக்கள்
காதலை நம்பியே
ராஜாங்கம் இழந்தனர்
ஆயிரம் ராஜாக்கள்!
வறண்ட மண்ணில் தவங்கிடக்கும்
எருக்கம் பூக்கள்
கொழுக்கட்டையின் வாசம் பிடிக்கும்
வினாயகர் சிலைக்குள்
பூவின்றி பூஜையில்லை
அலங்காரமில்லா கடவுளுமில்லை
தெய்வ அலங்காரம் அர்ச்சனைக்கு
பெண் அலங்காரம் விமசரனத்திற்கா?
அர்ச்சனைப் பூக்களின் பெண்ணிய வாச(த)ம்!
உதிரிப் பூக்கள் கேட்கின்றன
மாலை யாருக்கென்று
மெரினாவில் குடிகொண்ட
தலைவர் சிலைகளுக்கா
இல்லறத்தில் குடியேறும்
திருமண தம்பதிகளுக்கா
இரண்டும் ஒன்றுதானே
காக்கா எச்சமிட்டாலும்
துடைத்து போட்டுவிட்டு
அசையாமல் சிரிப்பதால்
“Shit” என்று முகம்சுளித்து
மாலைக்குள் நுழைந்தன
சம்பங்கிப் பூக்கள்!
ஓய்ந்து போன மரண ஓலம்
மழித்துப்போட்ட தலையின் ரோமம்
கழுவி விட்ட தண்ணீர் ஈரம்
பிரிந்தவர் விட்ட கடைசி சுவாசம்
செவ்வந்திப் பூவின் சிரிப்பின் வாசம்!
மரணமென்றால் ஒன்றுதானே
உனக்கும் எனக்கும்
என்னைப் புதைப்பாருமில்லை
தீயிலிட்டு எரிப்பாருமில்லை!
மதமில்லாததாலோ என்னவோ
மரணச்சடங்குமில்லை எனக்கு
இது செவ்வந்திப்பூவின் மரண ஓலை!
நான் எழுதாத பூக்களே
உங்கள் மேல் வஞ்சமில்லை
என் தமிழுக்குப் பஞ்சமுமில்லை
நீ மலர்ந்தாலே சிரிப்பென்று
சித்தரிக்கும் பல மூடர்களுள்
நானும் ஒருத்தியாய் ஆவேனோ?
உன் இதழெங்கே விழியெங்கே
கண்ணீரெங்கே கோவமங்கே?
தேடித் தேடி மீண்டும் மலர்வேன்
உனக்காய் ஒரு கதம்பம் கோர்ப்பேன்!!!