அம்மா நீ எங்கே?
அம்மா நீ எங்கே?
இப்பொழுதெல்லாம்…
நிம்மதியைத் தேடி
கோயிலுக்குச் செல்ல
வேண்டியிருக்கிறது
பசித்து வரும்போது
எனக்கு பிடித்த உணவு
இருப்பதில்லை
தலைக்கு குளித்து வந்தால்
ஜலதோஷம் பிடிக்கிறது
துவட்ட ஆளில்லை
கேட்டவுடன் சூடான தேநீர்!
இப்போது சூடாய் இருக்கும்போது
மட்டுமே சூடாய்
எந்நேரம் வந்தாலும் தயாராய்
இருக்கும் இரவுச் சாதம்…
இப்போது நீரில்மூழ்கி!
வெளியில் கிளம்பும்போது
உரிய உடைகளைத் தேடி
களைத்துப் போகிறேன்
உடல் நிலை பாதித்து
உடைந்து போகையில்
சுகமானமடி கிடைப்பதில்லை
சொர்க்கம் என்பதை இனி
மேலுலகத் திலாவது
பார்ப்பேனா தெரியவில்லை
‘கடவுளளித்த கடவுள்’ அம்மா
காலனிடம் போன நாள்முதல்
நான் சும்மா!
அடித்தது அப்பா வென்றால்
நானழுவேன் – அடித்தது
அம்மாவென்றால் அவளேயழுவாள்
அம்மா எனக்கென்றே
கடவுளைப் ப்ரார்த்திப்பாள்!
இப்போது நானே நேரடியாய்…
அம்மா என்றாலே அன்பு
என ஒலித்தது.. இப்போது
‘சும்மா’ என்றே ஒலிக்கிறது
கடவுள் மறுப்பாளி கூட
கடவுளாய் வணங்கும்
கடவுளே அம்மா
‘சாமி’ பல பெயர்கள்
பல உருவங்கள்
‘அம்மா’ அம்மா அம்மா!
‘கடவுளளித்த கடவுள்’ அம்மா
காலனிடம் போன நாள்முதல்
நான் சும்மா!