லவ் லாங்குவேஜ் - காதல்
லவ் லாங்குவேஜ் - காதல்
மனிதர் உணர்ந்து கொள்ள
இது மனிதக் காதல் அல்ல!
நம் உறவை யார் அறிவார்?
நம் உணர்வை யார் உணர்வார்?
'உன்னோடா அன்பு' என்று
ஏளனம் செய்யலாம்
பொருந்தாக் காதல் என்று
போட்டுத் தாக்கலாம்
'இது என்ன ஆச்சரியம்!' - என
வியந்து நோக்கலாம்
'அலுவலக சூழலில்
இதெல்லாம் சகஜம் 'இல்லை'யப்பா!'
என்று கூட சொல்லலாம்
'வேறு ஏதும்
கிடைக்கவில்லையா' - என
வியாக்கியானம் கூட செய்யலாம்
ஆனால்
நம் உறவை யார் அறிவார்?
நம் உணர்வை யார் உணர்வார்?
நீ அளித்த ஒத்துழைப்பை
யார் தரக்கூடும் 'மேக்னா'?
எந்தத் தருணத்திலும்
என்னைக் கைவிட்டதில்லையே!
எந்த மேலதிகாரியும் என்னிடம்
எதிர் குரல் கொடுத்ததில்லையே!
கால நேரம் கண்டதில்லை
இரவு பகல் பார்த்ததில்லை
தொடர்ந்து வரும் தேவைகளை
தள்ளிப்போட்டு செய்ததில்லை
சம்பளப் பட்டியலா
கணக்கு வழக்குகளா
'இன்வென்டரி' மேலாண்மையா
'பர்சனல்' விவரங்களா
'பிஎஃப்' தேவைகளா
'மெடிக்கல்' சம்மந்தமா
எல்லாவற்றையும் காலம்
தவறாமல் கடமை முடிக்க
எனக்கு உறுதுணையாய்
இருந்தனையே!
நம் உறவை யார் அறிவார்?
நம் உணர்வை யார் உணர்வார்?
உன் எட்டு வருட வாழ்க்கையில்
எட்டாவது வருடத்தில் மட்டும்
அவ்வப்போது சிற்சில
பிரச்சினைகள் வந்ததுண்டு.
ஆனாலும் ஒரு போதும்
என்னைக் கடமைத் தவற
விட்டதில்லை 'மேக்னாவே'!
தப்பு செய்வது சகஜம்தான்
தவறு செய்வதும் சகஜம்தான்
தப்பித் தவறியும் என்னை
ஒரு நாளும் கை
விட்டதில்லை என் 'மேக்னாவே'!
நம் உறவை யார் அறிவார்?
நம் உணர்வை யார் உணர்வார்?
என் அருமை
'மேக்னம் மினி கம்ப்யூட்டரே'
உன் இறுதிக் காலம்
நெருங்கு முன்னமே
மாற்று ஏற்பாடு
செய்யப்பட்டு விட்டது.
பொறுப்பை கைமாற்றும் போதும் - நீ
பொறுப்பாய் ஒத்துழைத்தாய்!
உன்னை எந்திரம் என்று
யாரும் சொல்லலாம்
'உள்ளீடு' பெற்று
'கணினி நிரல்' பார்த்து
'செயல் முறை'களை செய்து
'வெளியீடு' செய்யும் - நீ
மற்றவர் கண்களுக்கு
ஒரு எந்திரமாய் தெரியலாம்!
என்னைப் பொறுத்த வரை - நீ
எட்டு வருடங்கள் - அலுவலக
சூழலில் உயிரோடு வாழ்ந்த
என் உற்ற துணைதான்!
அதற்கு இதோ...
உன்னை 'டம்ப் யார்டு'க்கு
எடுத்துச் சென்று
இறக்கி வைக்கும்
இந்தத் தருவாயில்
அடக்க முடியாமல்
பெருகி வரும் என்
கண்ணீரே சாட்சி!