வண்ணமையமான வார்த்தைகள்
வண்ணமையமான வார்த்தைகள்


சிவப்பு-பேரார்வம்
கடிவாளம் கையில் பிடித்து ,
கம்பீரமாய் மார்ப்பு தரித்து,
கவசம் கல்போல் மிரட்ட,
கையில் வாளோ மிளிர.
எதிரியை கண்டு அதிரா,
குதிரை சீறப் பதறா,
பிரமாண்டமாய் வலம் வரும்,
வேந்தன் நான் எனும்;
எண்ணம் நெஞ்சில் கொண்டு,
நடையில் திமிரு கொண்டு,
கைகள் கோர்த்துக் கொண்டு,
செல்ல,
என் இரும்புக்குதிரை உண்டு.
ஆரஞ்சு-இளமை
வேகம் என்றும் குறையாக் காலம்;
சோகம் ஒன்றை அறியாக் காலம்;
வலிகள் விரைவில் மறையும் காலம்;
வலிமைத் தோளில் வாழும் காலம்;
தடுக்கி விழுந்து எழும் காலம்;
தவறியும் திசைமாறக் கூடாக் காலம்;
சுகம் அனைத்தும் சேர்ந்த காலம்;
சொர்க்கமும் விரும்பும் இன்ப காலம்;
ஆற்றலை அளக்க இயலாக் காலம்;
அச்சமே இல்லா இளமைக் காலம்!
மஞ்சள்-மகிழ்ச்சி
போராடிப் பெற்ற வெற்றி,
தேடிக் கிட்டிய பொருள்,
பாடுபட்டு சேர்த்த பணம்,
காதலித்து இணைந்த மனம்,
இவையே மகிழ்ச்சி எனும் உலகே!
மகிழக் காரணம் தேடும் மனமே!
மொட்டு அவிழும் அழகு,
தெரியாக் குழந்தை சிரிப்பு,
தொலைதூரப் பயணத்தின் சிலிர்ப்பு,
சில்லென்ற ஆற்றுக் குளியல்,
என எங்கும் மகிழ்ச்சிகள் உள்ளதே!
அவற்றைத் தேடியே செல் உள்ளமே!
பச்சை-இயற்கை
ஓடியாட, துடியாய் துடிக்கும் மனம்,
அலைய, அலையாய் அலையும் அகம்,
இரவிலும், இமைமூட இசையாத கண்கள்,
நிற்காமல், நித்தமும் ஓடும் கால்கள்,
சகாவிடம், சதா வாயாடும் வாய்,
சைகை செய்யாமல் பேசாத கைகள்,
உன்,
அழகில், அமைதியில், அசாத்தியமாய் அடங்கி,
சாந்தமாய், சத்த மின்றி, சிந்தனை,
ஏதுமின்றி, செயல்களில் நாட்டம் இன்றி,
மெய் மறந்தேன் மந்திர மலையரசியே!
நீலம்-நம்பிக்கை
விடியலை நம்பியா, விழிமூடுகிறோம் இரவில்?
விதியை நம்பியேன் வழிமாறுகிறோம் பகலில்!
ஒருசொல் நம்பியே ஏற்க்கிறோமா எதையும்?
பிறர்சொல் நம்பியே தாழ்த்துவதேன் நம்மையே!
அதிர்ஷ்டம் நம்பியே அமர்வதேன் தினமும்?
திட்டம் நம்பியே உழைத்திடுவோம் நிதமும்!
பிறரை நம்பத்தான் குழம்புகிறோம் மனதில்,
நம்மையே நம்பித்தான் வாழஃந்திடுவோம் உலகில்!
ஊதா-மர்மம்
சமூக ஊடகத்தில்;
ஆயிரம் நண்பர்கள், பட்டியலை அலங்கரிக்க,
ஆளை மாய்க்கும் மனச்சோர்வு அண்டுவதேன்!
மாற்றார் சொல்லில் மயக்கமில்லை எனும்
பதிவின் பதிலுக்காய் புழுங்குவது ஏன்!
முகம் தெரியா நண்பருடன் உறவாடும்
மோகத்தில் உற்றவரை உதறுவது ஏன்!
சுதந்திரமாய் சமூக ஊடகத்தில் பதிவிட்டு,
பிறர் கருத்திற்கு ஒட்டுண்ணி ஆவதேன்!
பிரபலம் எனும் பிம்பத்தினுள் புக,
மனிதத்தை மறந்து பிறஉயிரை வாட்டி,
மானத்தை விற்று கவர்ச்சி காட்டி,
மாற்றாரை ஏசி கிளர்ச்சி ஊட்டி,
முட்டாளாய் மாற பயிற்சி ஈட்டி,
பித்துப் பிடித்து பிணம் தின்பதேன்!
இன்னதிது என்னும் தெளிவு இல்லாமல்,
சபலத்தில் சிலநேரம்,
சண்டையில் பலநேரம்,
காயப்படுத்தி கணநேரம்,
காயப்பட்டு பெரும்நேரம்,
முட்டாளாய் முழுநேரம் சிந்தையின்றி சஞ்சரிப்பதேன்!
சாமானிய மக்கள்,சந்திக்க, சிந்திக்க,
செய்திகள் பகிர, சேர்ந்து வளர,
சக மனிதனை சாதிக்க தூண்டிட,
சாதித்த மனிதனைக் கண்டு கற்றிட,
சமூகத்தில் சகோதரத்துவம் மலர,
சிறப்பாய் செதுக்கிய சமூக ஊடகம்;
சிந்தையில்லா மக்கள் பலரின் உறையிடம் ஆனதேன்?
இளஞ்சிவப்பு-காதல்
கோர்க்கக் கோரிடும் விஷமக் கைகள்,
பிரியப் பிரியம் இல்லா இதழ்கள்,
தனிமை தணிக்கும் காதல் துளிகள்,
மறித்தாலும் மறவா நினை வலைகள்,
எல்லை எல்லாம் இல்லா உரைகள்,
இல்லை இல்லை சோகக் கதைகள்,
என்னை உன்னில் காணும் நொடிகள்,
உன்,
கண்ணில் கண்டேன் என்வாழ்வின் விடைகள்!
கருப்பு-ஆற்றல்
வழியெங்கும் வலி காணும் வறியவனாய்,
விழியிரண்டும் துளி கொண்ட எளியவனாய்,
சூழ்நிலையில் சுருண்டுவிடும் சிறியவனாய்,
சிற்றன்பமே சிறப்பென்னும் அறிவிலியாய்,
தன்னிலை
தாழ்ந்து, தவிர்த்து, தளர்ந்து!
துணிவுதனை
மறந்து, மறைந்து, மரித்து!
வாழாமல் இப்புவியில் வசித்து விடைபெறும்;
மனிதர்கள் மத்தியில்;
வழிதேடும் விழியவனாய்,
வலிதாங்கும் வலியவனாய்,
வழிபோடும் துணியவனாய்,
வாழ்வில் வலம் வரும், வலியவன்;
வலியவன் வாழ்வான்!
அவ்வலியவனே வாழ்வான்.
வெள்ளை-அமைதி
தேடுகிறேன்! சுட்டெரிக்கும் சூரியனின்,
வெப்பத்தில்; நிழல் ஒன்றினை!
ஓடுகிறேன்! எப்பொழுதும் குறைகூறும்,
உலகத்தில்; பழிகூறா உறவுதேடி!
பாடுகிறேன்! என்னாசை மதிக்காத,
மனிதத்தில்; என்மனப் பாட்டினை!
நாடுகிறேன்! நானாக நானில்லா,
பிம்பத்தில்; அமைதியாய் என்னை!
பேசுகிறேன்! அமைதியின் அர்த்தமறியாக்,
கூட்டத்தில்; தன்னிலையே அமைதியென!
பழுப்பு-முழுமை
மாறா மோகம் மாற்றார் வாழ்வில்,
உள்ளத் தாசை இல்லாப் பொருளில்,
தீராக் கவலை நேரா நிகழ்வில்,
செல்லும் திசை செவிகேள் வழியில்.
மூளையை கசக்க முயல்வ தில்லை,
நம்பிக்கை என்றும் நம்மீ தில்லை,
பிறரின் சொல்லில் பிழைகள் இல்லை,
தனக்கு என்று தனித்துவம் இல்லை.
என
ஆற்றல் என்ன? அளந்து பாரா!
தேடல் என்ன? துணிந்து தேடா!
தேவை என்ன? தெரிந்து ஓடா!
எதிர் மறையை எதிர்த்து மோதா!
கேளா கானமாய் வாழா மனிதா,
உயிர் வாழ்வது உனக்காகத் தான்.
உனது வழியில் உன் களிப்பினை,
உறுதியாய்ப் பற்றி முழுமையாக வாழ்.