நரை வந்தும் கறையில்லா காதல்
நரை வந்தும் கறையில்லா காதல்


என் சட்டையில் ஒட்டி
நிற்கும் அவள் ஒற்றை
நரைமுடி இனி ஒரு முறை
என் சாதத்தில் தவழுமோ!
அவள் நெற்றி சுருக்க
வரியில் நீந்தி வரும்
வேர்வை துளி இனி
ஒரு தரம் என் மேல் விழுமோ!
அவள் குட்டை விரல்
பிடித்து நான் நகம் கடிக்க
தவம் புரிந்தேனும் எம்
இரு கரங்கள் மறுமுறை சேருமோ!
அங்கு பெட்டி பெட்டியாய் அடுக்கி
வைத்த பட்டு சேலையில் விட்டு
வைத்த அவள் வேர்வை வாசம்
இனி ஒரு முறை என் மேல் வீசுமோ!
அவள் நெற்றியில் வட்டமிடும்
ஸ்டிக்கர் பொட்டு கூட்டங்கள்
இனி ஒரு முறை வட்டமுகம்
தொட்டுவிட கண்கள் காணுமோ!
இன்று மண் அரித்து
கொண்டிருக்கும் அவள்
பொன் உடல் உயிர் பெற்று
காண இக்கிழவன் உயிர்
இன்னுமோர் யுகம் தாங்குமோ!