செருப்பு தைக்கும் சாமானியர்
செருப்பு தைக்கும் சாமானியர்


எட்டனாக்கு தைக்க ஆரம்பிச்சு
50 வருசம் ஆனாலும் என் வூட்டு
வறுமை இன்னும் ஏறக்குறைய
தீரலிங்க!
எம்ஜியார் போயி எடப்பாடி வந்தும்
கலைஞர் போயி ஸ்டாலின் வந்தாலும்
என் பொழப்பு 70 வருசமாயும்
விடியலிங்க!
ஊர் பெருசாகி உலகமும் பெருசாகி
ரோடு எல்லாம் ஓருசாகி இருந்தாலும்
சாக்கடைக்கு பக்கத்துலதான்
எங்களுக்கு சாக்கு போட அனுமதிங்க!
200ரூவா செருப்ப தைச்சிக்கிட்டு
எட்டனா சேத்தி கேட்டா படிச்ச
புத்தியெல்லாம் ஒதுக்கி
வச்சுக்கிட்டு வயசான கெழவன்
கிட்ட வரைமுறை இல்லாம பேரம்
பேசுதுங்க!
பெத்துப்போட்ட புள்ளைங்கெல்லாம்
பக்குவமா படிக்கோனும் பள்ளிக்கோடம்
சேத்திவுட்டா அப்பனப்போல பீடி
வாங்கி குடிச்சிட்டு புத்தி கெட்டு
திரியுதுங்க!
அப்பன போல ஆகாம அறிவ
வளத்தி படிச்சு ஊர் மெச்சராப்பல
வாழு சாமினு சொன்ன பாவத்துக்கு
எதுத்தாப்ல குடய விரிச்சு
உக்காந்து எனக்கே எதிரியா
நிக்குதுங்க!
கட்டிக்கிட்ட நாளுளிருந்தே ஒத்த
சீலை எடுத்த தராத எம்வூட்டு
பொம்பளைக்கு உசுரு
போறக்குள்ள ஒரு பட்டு சீலை
எடுத்துருனும்னு மனசு உள்ளூர
துடிக்குதுங்க!
குத்தூசிக்குள்ளயும் குத்தும்
செருப்புக்குள்ளயும் குத்த வைச்சு
தைச்சு தைச்சு சேத்து வைச்ச
சொத்து இந்த ஒத்தை ஓட்டை
குடையும் பத்து வார் செருப்பும்
தாங்க!
மொத்த உலகமும் மாறி போச்சு
மூஞ்சிக்கு துணியும் கட்டியாச்சு
சோத்துக்கே வழி இல்லாம
செருப்பு தைக்கும் நாங்கெல்லாம்
சொத்து சேத்தி சுகங்காண
எப்பதான் விடியுமுங்க!