பரிதாபமான பட்டணத்து வாழ்க்கை
பரிதாபமான பட்டணத்து வாழ்க்கை
தலைமுறையாக தலைமுறையாக
கூட்டுக்குடும்பம் தனது
கிராமத்து எல்லையை
தாண்ட முடியாமல்
பண்ணை வீட்டிற்குள்
முடங்கிக் கிடந்தது..
கால ஓட்டத்தில்
தப்பித்தவறி கிராமத்து
எல்லையை தாண்டி
பட்டணத்தின் எல்லைக்குள்
பட்டாளமாக படையெடுத்து
நுழைந்த ஓரிரு
கூட்டுக்குடும்பங்களும்
பட்டபாடுகளை
பட்டியலிட்டால்
வானரத்தின்
வால் போல நீளும்..
பட்டணத்தில்
வாடகைக்கு வீடுதேடி
வாடகை வீட்டுச்
சொந்தக்காரரின்
வாசலுக்குச் சென்ற போது
தலைகளின் எண்ணிக்கையை
கண்டு மிரண்டு போன
வாடகை வீட்டுச் சொந்தக்காரன்
நிமிர்ந்து ஒரு கணம்
முகத்தைக்கூட பாராமல்
திறந்த கதவினை படீரென
அடித்து மூடிக்கொண்ட போது
பட்டணத்து எல்லைக்குள்
முதலடி எடுத்து வைத்த
கூட்டுக்குடும்பத்தின்
முதுகில் முதல் அடி விழுந்தது..
கூட்டுக்குடும்பத்தின் தலைவனுக்கு
இதுவரை பலமாக இருந்த
குடும்பத்தின், தலைகளின்
எண்ணிக்கை தலைகீழாகத்
தெரியத்தொடங்கியது....
முதலையின் பலம்
தண்ணீருக்குள் மட்டும்தான்..
எல்லை தாண்டினால்
எல்லாமும் வீண்தான்..
உணரத்தொடங்கிய
தருணத்தில்..
பட்டணத்து வாழ்க்கை
உயிரினும் உயர்வாக
மதித்து கற்பை போலக்
காப்பாற்றி வந்த
தன்மானத்தை காவுகேட்பது..
மதிக்கு எட்டி சுளீரென உரைத்தது..
விதி மெள்ள எள்ளி நகைத்தது..
அடுத்த கட்டமாக
கூட்டுக்குடும்பத்தின்
கூட்டணி உடைந்தது..
அந்த பாவத்தையும்
பட்டணமே ஏற்றது..
கூட்டுக்குடும்பங்கள்
தனிக்குடித்தனங்களாக
வெடித்துச் சிதறின..
கூட்டுக்குடும்பத்துக்கு
ஒற்றை வீடு வாடகைக்கு
கொடுக்க மனமில்லாத
பட்டணததில்
உடைந்து போன
கூட்டுக்குடும்பத்தின்
சிதறல்களான
தனிக்குடும்பங்களுக்கு
பத்து வீடுகள் பற்றாமல்
போனாலும் ..
மிச்சமிருக்கும்..
சின்ன குடும்பத்தலைவனுக்கும்..
சின்ன வீடு கிடைப்பதில்
சின்ன சிக்கல் கூட வாராமல்
இல்லை..இல்லை..
சிறிய வீடு கிடைப்பதில்
சிறிய சிக்கல் கூட வாராமல்
பட்டணத்து நடைமுறை
பக்குவமாய்
பார்த்துக் கொண்டது..
புலம் பெயர்ந்து உருமாறி
உருவான தனிக்குடும்பத்தின்
நகரத்து நாகரிக வாழ்க்கை
தடம் மாறி, தடுமாறத் தொடங்கியது
குடும்பங்கள் இன்னும் உடைந்தன
உறவுகளின் வலிமை குறைந்தது
கலாச்சாரம் கலப்படமானது
மனசாட்சியின் பிடி தளர்ந்தது
மனிதன் நடிகனாக மாறினான்..
பகட்டு வாழ்க்கை தொடங்கிய
போது உண்மையான வாழ்க்கை
நிரந்தரமாக விடை பெற்றது..
பொருளுக்கும், பணத்துக்கும்
பதவிக்கும் புகழுக்கும்
அடிமையான மனிதன்
பாரம்பரியத்தை விட்டு விட்டு
பாதை மாறினான்..
காலமாற்றத்தில் கலாச்சாரத்தை
விட்டு விட்டானோ?? இல்லை
விற்று விட்டானோ??
அறத்தை மறந்தான்
தடம புரண்டு
தவறு செய்யத் துணிந்தான்
..
நாகரிகமான நகரத்து
வாழ்க்கை என்ற போர்வைபில்
கூட்டுக்குடும்பம் உடைந்து
உருவான
தனக்குடித்தனத்தில்
தனமும் பணமும் பெருகி
தனிக்குடித்தனம்
தனித்துவம் பெற்று
தன்னிறைவு கண்டதாக
காட்டிக் கொண்டாலும்..
தனிக்குடும்பத்தின்
அடுத்த தலைமுறை
கடல்களைத் தாண்டி
உறவுகளை பிரிந்து
வேர்களை மறந்து..
உணர்ச்சி வயப்படுதல்
அன்பிற்கு அடங்கி
அன்பால் அணையிடுதல்
போன்றவற்றை அறியாமல்
குடும்பத்தை விட்டு வெளியேறி
வெளிநாட்டில் குடியேறி
அங்கேயே தங்கி விட்டதால்...
நில்லாது ஓடி
ஓய்வின்றி உழைத்து
ஈட்டிய பொருளோடு
வங்கியில் கடனை வாங்கியும்
மொத்த சொத்தையும்
விற்ற பணத்தையும்
மொத்தமாய் கொட்டி
செலவிட்டு பெற்ற பிள்ளையை
வெளிநாட்டிற்கு
தத்து கொடுத்த பெற்றோர்களுக்கு
பேரனோ பேத்தியோ
பிறந்தவுடன்..
இதுநாள் வரையிலும்
இல்லாத அன்பினை
அமெரிக்காவிலிருந்து
தாய்நாட்டிலிருக்கும்
பெற்றோர் பக்கமாய் வீசி
விசாவுக்கு ஏற்பாடு செய்து
வானூர்தியில் ஏற்றி
வெளிநாட்டுக்கு
அழைத்துச் செல்லப்பட்ட
பெற்றோர்கள் பெரும்பாலும்
இருவருள் பிரித்தெடுத்த
தாயோ தந்தையோ மட்டுமே..
இணைபிரியாமல் வாழ்ந்த
இருவரையும் பிரித்து ஓருவரையோ
சற்றே இரக்கப்பட்டு இருவரையுமோ
தான் பெற்ற குழந்தைகளை
பார்த்து பராமரிக்க
சம்பளமில்லா பணியாளர்களாக
பணியமர்த்தி, ..
பணிக்காலம் முடிந்தவுடன்
பாரமாகி விடுவதனால்
தாயகத்திற்கு திருப்பி
அனுப்பும் வரையிலும்
ஒய்ந்திட மாட்டார்கள்
மகனும் மருமகளும்..
மகளும் மருமகனும்..
திரும்பி வந்த முதியோர்கள்
தங்களது ஒரே பயணத்தில்
கற்ற பாடங்களும்
பெற்ற அனுபவங்களும்
இன்னொரு சுற்று
வெளிநாட்டுக்கு எப்போது
என்று கேட்க நினைப்பவர்கள்
கேட்கும் முன்னரே ..
"வேண்டவே வேண்டாம்"
என்னும் முடிவெடுத்து
எஞ்சிய வாழ்க்கையை
தங்களைப் போன்றே
சாதனைகள் படைத்த
இன்னும் சில முதியோர்களோடு
முதியோர்கள் இல்லத்தில்
இணைந்து வாழ்கிறார்கள்
கண்ணீரை மறைத்து கொண்டு
புதியதோர்
கூட்டுக்குடும்பத்தில்...
இரா.பெரியசாமி..
..