அழகி
அழகி
நீ உன் உடலை அதிகமாக மதிக்கின்றாய், விரும்புகின்றாய். அதனுடைய வெளிப்பாடுதான் உன்னுடைய ஒவ்வொரு உடை தேர்வும். எல்லாம் உந்தன் அழகை மரியாதை செய்வதாகவே இருக்கின்றன. நீலமும் சிகப்பு சார்ந்த நிறங்களும் உன் மேனி நிறத்தோடு மேவி சௌந்தர்ய ஒளியை தருவிக்கின்றன. எதை அணிந்தால் நாம் அழகாகத் தெரிவோம் என்பது ரசனை என்றால் - எதை நாம் அணியக்கூடாது என்று தெரிந்துகொள்ளுதல் ரசனையின் முத்தாய்ப்பு. உனக்கு அது நன்றாகாவே தெரிந்திருக்கிறது.
உன்னை அழகென்று சொன்னால், ஐயோ நான் சுமார் தான் என்கிறாய். தினமும் கண்ணாடியில் பார்த்துப்பபார்த்து பழகிப் போய்விட்டதால் நிஜமாக உந்தன் அழகை உன்னால் அறிந்துகொள்ளவே முடியாது. ஓரளவிற்கு வேண்டுமானால் பார்க்க நன்றாக இருப்பதாக ஒரு முடிவுக்கு வருகிறாய்!.ஆனால் நீ அது மட்டுமல்ல!!
உன்னிடம் தேங்கிக்கிடப்பது அழகின் முழுமை,
சிற்பத்தின் செய்நேர்த்தி,
நறுக்கி வைத்தாற்போல நறுந்திகழ் வளைவு
வெண்ணையை திரட்டி எடுத்த மினுமினு கண்ணம்
புருவத்தை வெட்டுக்கத்தி மாதிரி வைத்துள்ளாய். கண்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஏதோ மாபெரும் இருளில் இருந்து திசைதவறி வந்துவிட்ட வானவெள்ளியின் ஒளியைக் கொண்டுள்ளது அது.
வரிசையாக இடம்விட்டு நிற்கும் பள்ளிப்பிள்ளைகள் போல உதட்டில் வரிகள். முன்கழுத்தைச் சுற்றி வளைந்து வரும் இரண்டு நீளமான மடிப்பு ரேகைகள். This is sexy!
மீண்டும் மீண்டும் பார
்க்கத்தூண்டும் முகம் உன்னுடையது.
மழை பொழிவதற்கு முன்பு சூழலில் வெம்மை பரவும் அல்லவா,
மழைக்கு பின்பு சூழலில் குளுமை சூழும் அல்லவா அப்படி இருக்கிறது உன் முகம் பார்க்க.
உந்தன் வண்ணம் சிகப்போ மாநிறமோ அல்ல. நீ இளமஞ்சள் நிறம்.பலாச்சுளையின் நிறம், சூரியகாந்திப் பூவின் நிறம், மாலை வேளையில் வானத்தில் பரிதி பரப்பிவைக்கும் ஓவியத்தின் நிறம்.
தினமும் இரவு வருகிறது சௌந்தர்யமாய், கால்கை மூட்டு மற்றும் விரல்களின் மொலிப் பகுதிகளில் இளமஞ்சளில் இருட்கருமை கூடி சிறியஇரவை கூடவே கூட்டிக்கொண்டு வளைய வருகின்றாய்.
ஒரு நாள் நீ உன்னைச் சொன்னாய், உன் காதலைச் சொன்னாய், உன் கவிதையை, உன் தேடலை, உன் ஆசையை, உன் எதிர்பார்ப்பை, உன் ஏமாற்றத்தை, உன் தோல்வியை, உன் வெற்றியை மற்றும் உன் தனிமையை...
மாபெரும் மௌனத்தின் கரையில் நிற்கின்றாய். உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும்
உன் முகத்தைத் தாண்டி,
உன் உடலைத் தாண்டி,
உனக்குள் மிதந்து கொண்டிருக்கும்
உருவமே இல்லாத உன் உயிரிடம் இதைச் சொல்ல வேண்டும்.
"நீ ரொம்ப அழகி"