சபிக்காதே
சபிக்காதே


ஏதோ கோபத்தில்
ஒருவனை சாகும்படி
சபிக்கபோனவன்
அப்படியே அதை விழுங்கிவிட்டேன்
என் வாழ்த்துகளைப்போலவே
நான் சபிப்பதால்
அவனுக்கு ஒன்றும்
ஆகப்போவதில்லை
ஆயினும்
யாரும் யாரையும்
விளையாட்டிற்குக்கூட
இந்தக்காலத்தில்
'செத்துப்போ' என
சொல்லக்கூடாது
நீங்களும்
நானும்
அவனும்
வாழ்வுக்காக
ஒன்றுபோலவே போராடும்போது
மனிதர்கள்
பறவைகள்போல
அழியும் காலத்தில்
நீ விளையாட்டிற்குக்கூட.
யாரையும் சபிக்காதே
மனிதர்களை எப்படியாவது
இந்தக் காலத்தில்
காப்பாற்றிவிடவேண்டும் என்பதைத்தவிர
வேறெதையும் நினைக்காதே