அவன் அவளிடம்.
அவன் அவளிடம்.


அவன் அவளிடம்...........
பெண்ணே !
உன்னை காதலிக்கிறேன் !
சம்மதம் சொல் !
எம்மதமும் தேவையில்லை !
எக்குலமும் பெருமை இல்லை !
எனக்கென்று நீ இருக்க !
உனக்கொன்றெனில் நான் துடிப்பேன் !
நண்பர்கள் நல்மனம் சூழ
முடிந்தால் நம் பெற்றோர் சம்மதம் பெற்று
மனம் முடிப்போம் !
இரும்பினில் இணைத்ததாய்
இதயங்கள் இணைந்திருப்போம் !
உன் உறவுகள் மொத்தமாய்
ஓர் உருவில் நான் இருப்பேன் !
தோன்றும் போதெல்லாம் வர்ணனை
கவிதைகள் வாசிப்பேன் !
நிலவுக்கு உயிர் கொடுத்து
அதன் நிழல் தொட்டு விளையாட சொல்வேன் !
உன் பாவனைகளுக்கென ஒரு சுவர்
எழுப்பி அதில் ஓவியம் வரைந்து வைப்பேன் !
வீட்டின் அறைகளில் காற்றை போல்
காதலை நிரப்பி வைப்பேன் !
பாதைகள் நீளும் வரை
பயணங்கள் சென்றிடுவோம் !
நம் பெற்றோர்கள்
நல்ல துணையே பிள்ளைகள் பார்த்துள்ளனர்
என ஒரு நாள் ஒப்புகொள்ளும் படி
வாழ்ந்திடுவோம் !
கடைசியாய் கேட்கிறேன் !
காதலாய் வரவேண்டாம்,
என் காரணமாய் வருவாயா ?!
.............
மௌனத்தில் மிதந்தவள்
தன் தலை உயர்த்தினாள்
கொஞ்சம் குரல் தளர்த்தினாள்
............................
உன் காதலை மதிக்கிறேன்
இருந்தும் சம்மதம்
மறுக்கிறேன் !
நீயும் நானும் நாகரிகம் கற்று விட்டோம்
சாதிகள் இல்லை என்போம் !
நம் பெற்றோர்கள் கேட்டதும் கற்றதும்
சாதி கதைகள் தானே,
சாதி கதைகளே அவர்கள் கண்ட சாதனை கதைகள் !
இருந்தும் அவர்களை வெறுத்து
நம் காதலை வளர்க்க எனக்கு மனமில்லை !
இன்னும் சொல்கிறேன்,
இது என் திருமண கனவு ,
தகப்பன் மடிஅமர்ந்து தலை குனிவேன்
கண்ணில் நீர் பெருக்க சிரித்திருப்பேன்
மகள் முடிச்சவிழ்ந்து மனைவி முடிச்சுவிழும் !
அச்சதை மழை பொழிய ! வாழ்வின் அச்சங்கள் கரைந்தோடும் !
என் தகப்பன் என் தாயவளை பார்ப்பான் !
அவள், இன்பத்தின் உச்சியில்
புது பட்டு புடவையின் முந்தானையில்
ஆனந்த கண்ணீர்க்கு அணைகட்டுவாள் !
என் திருமணம் இருமனமாய் வேண்டாம் !
சுற்றத்தின் ஒருமனதாய் வேண்டும் !
அறைகள் நிரப்பிட காதல் வேண்டாம்
வீட்டின் அறைகளெல்லாம் உறவுகள் வேண்டும் !
அந்த உறவுகள் நிரம்பிய மண வாழ்க்கை வேண்டும் !
ஆதலால் காதல் வேண்டாம் !
.......................
அவள் களைத்த மௌனத்தை
ஒருசேர்த்து அவளிடமே கொடுத்துவிட்டு
விடை பெற்றான் !
அவள் காரணமும் மறுப்பதில்லை !
அவன் காதலும் தோற்கவில்லை !
........................
வந்தவழி மறந்து அவன் திரும்பிய வீதியில்,
ஏதோ ஒரு வீட்டில், யாரோ ஒரு சிறுவன்
உரக்க படித்து மனப்பாடம் செய்துகொண்டிருந்தான் !
“சாதிகள் இல்லையடி பாப்பா............” !.
..........................