கைகழுவிய காலம்
கைகழுவிய காலம்
மானிடர்கள் நோயுற்ற பிறகுதான் மானிடர்களை நேசிக்கிறார்கள் ! நோயுற்றவர்களை நேசிக்கிறவர்கள் - நேசிக்கபடுக்கிறார்கள் ..!
ஓடி ..ஓடி ...திரிகின்ற ..! ஓய்வற்ற நம் வாழ்க்கை..! உருவம் கொண்டு கண்ணருகில் சுற்றி திரியும் உறவுகளை உவகை கொண்டு நோக்காத உவப்பேற்ற இவ்வாழ்க்கை...
அவசர பொழுதுகளில் கை கால் கழுவாமல் ..உணவுதனை விழுங்கிவிட்டு காத்திருக்க நேரமின்றி காற்றில் பறக்க வைக்கும் கடுமையான அலுவல்கள்...
சோலிகள் பல முடித்து சோம்பலுடன் திரும்புபவர் புதினம் அறியா அவலின்றி படுக்கையில் வீழ்ந்திடுவார்... மறுநாள் ஓட்டத்திற்கு மருந்தினை ஏற்றுக்கொள்ள... இந்த பூமியிலிருந்து மனிதன் அந்நியப்பட்டு போன அநியாயம் - வாழ்க்கை என்ற கோப்பை அமுதத்தால் நிரப்பட்டிருந்தாலும் ..மனித நாவுகள் கோப்பைக்கு வெளியே அலைந்துக் கொண்டிருக்கும் அநாகரிகம்..!
நாகரிகம் கண்டு நம் பண்பாடு மறந்திட்டவர் -தம் பழக்கங்கள் மாற்றியபின் பகட்டாய் வலம் வருவார்... அதைப் பரப்பும் பல முயற்சி அக்கறையாய் செய்திடுவார்..!
கரம் கொடுப்பதென்ன..!கட்டிப்பிடிப்பதென்ன..! உதடுகள் உரசிக் கொள்ள காதல் செய்வது என்ன ...!
மரக்கறி தனை மறந்து மாமிசம் புசிப்பதென்ன..! வாழ்க்கை நெறி தவறி வாழ்கின்ற மானிடர்களின் சித்தம் ஏற்கும்படி புத்திமதி புகட்டிடவே கொரோனா என்ற ஒரு கோமகன் வந்துவிட்டான்..!
மானிடர்களே! உன் விஞ்ஞானம் விண்வெளிக்கு செல்ல செல்ல உன் மனிதாபிமானம் மண்குழிக்குப் போகிறதே...!
ஆயிர அணுகுண்டும்.. அளவற்ற ஆட் படையும்... கோடி பணம் இருந்தும் கோவிட் பத்தொன்பதை அடக்கும் மார்க்கமதை அறியார் மானிடர்கள்..!
ஊரடங்கு எனும் பெயரில் வீடுகளில் விலங்குகளாய் அடைபட்ட
மாந்தர்கள் அறிய துவங்கினரே தத்தமது பிழைகளையும் உண்மை நிலைகளையும்..!
கண்முன் உறவெல்லாம கனவாய் வந்து செல்ல கைபேசி உதவியுடன் கதைக்க தொடங்கினரே ...- கவலைகள் தனை மறந்து களையாய் மாறினரே..!
இன்பம் தொலைத்த பறவைகளாய் இல்ல கூட்டினுள் சிறைப்பட்டே பொழுதைப் போக்க வழியின்றி பெருமை துடித்த மனிதர்கள்... குறும்பாய் சிரிக்கும் குழவியினை குலவியே நேரம் கடத்திடுவார்...!
பரவும் கிருமி பயத்தினிலே பவ்வியமாக நடத்திடுவார்..! பக்கத்து வீட்டிற்கு சென்றாலும் பக்குவமாய் மேனி கழுவிடுவார்..! பயத்தில் சுத்தம் பேணிகொண்டே பதவிசாகவே நடந்து கொள்வார்..!
ஒருவரை ஒருவர் சந்தித்தால் - ஒரு கரம் நீட்டிக் குலுக்காது ..! ஒருமிக்க இருகரம் கூப்பித்தான் - ஒற்றுமை பண்பு வளர்த்திடுவார் ...! ஒட்டிக் கொண்டும் நிற்காமல் ஒரு மீற்றர் தள்ளியே நின்றிடுவார்..!
செய்திகள் கேட்கவே நேரமின்றி செவியை மூடிப்படுத்தவர்கள்...! செத்தவர் தொகையை கேட்டபடி செழுமை தொலைத்து வறண்டிடுவார்..! செம்மையான செய்திகளை செவிமடுக்க தான் விரும்புவார்..!
வைரஸ் என்ற போர்வைக்குள் வாழ்க்கை என்ற பொக்கிஷத்தை ஒளித்து வைத்து ஆண்டவனும் அனுப்பிய பரிசு கொரோனவோ..! விஞ்சும் மனித தவறுகளை திருத்தி கிடைத்த மறுவாய்ப்போ..??
பாடங்கள் பலவும் கற்றுவிட்டோம் - கொடும் நோயே உந்தன் கொடையாலே ...!
கொடும் நோயே ..! உடல் என்ற படகுக்கு நல்ல நாங்கூரம் நீ ...! உனக்கு மருந்து தந்தால் பாதி வலி குறையும் - புரிந்துக் கொண்டால் மீதி வலி குறையும் ..!
உயிர்பலி மட்டும் இல்லையென்றால் உவகை மிக்க ஆசான் நீ ..! வாழ்வின் இனிமை உணர்த்துவிட்டாய்..!
வா(ழ்)த்தியே உனக்கு விடைக்கொடுப்போம்.!