வெறுமையை உணர்வது
வெறுமையை உணர்வது
வெறுமையை என்றாவது
நீங்கள் உணர்ந்ததுண்டா?
உடைந்த எலும்பிற்கு
கட்டுப்போட்டு
மெத்தையில் படுத்திருக்க
சொந்தங்கள் சில வந்து
நலம் விசாரித்து
கதை பேசி
இருள் சூழ்ந்த உங்களது முகத்தில்
புன்னகையை வரவழைத்துவிட்டு
பின் விடைபெற்று
செல்லும் போது
வெறுமையை நீங்கள் உணர்ந்ததுண்டா?
தண்டவாளத்தின் மேல் ஓடும்
ரயில் பெட்டியின்
ஜன்னல் வழி
உள் நுழைந்த காற்றில் அசைந்த
முடியை சரி செய்தவாறே
காதல் மொழி பேசியவரிடமிருந்து
கவிதை பிறப்பது தடைப்பட்டு போகும் போது
வெறுமையை நீங்கள் உணர்ந்ததுண்டா?
வெற்றிக்கும் தோல்விக்கும்
நடு புள்ளியில்
தனி நபராக நின்றுகொண்டு
விழுந்த போது
தட்டி எழுப்பியவரையும்
எழுந்த போது
எட்டி உதைத்தவரையும்
நினைத்து பார்த்த கணம்
வெறுமையை நீங்கள் உணர்ந்ததுண்டா?