தலைவனைக் காக்கும் தலைவிகள்!
தலைவனைக் காக்கும் தலைவிகள்!
சங்க காலம்:
தவறேதும் செய்திட்டால்
ஊர்க்கடவுள் தண்டிக்கும்!
ஊர் வாழ் மக்கள் தம்
உளமார்ந்த நம்பிக்கை!
உன்னைப் பிரிய மாட்டேன்…
சூளுரைத்தான் ஒரு தலைவன்
சொல்லிப் பின் பிரிந்ததனால்
நலிவுற்றாள் ஒரு தலைவி!
ஊறிழைத்தான் தலைவன் என
ஊர்க்கடவுள் என் செயுமோ?
அஞ்சி நின்ற தலைவியவள்
அகம் முழுக்க பக்தியினால்
‘என் அன்புக் கடவுளே!
என் தேகம் மெலிந்ததற்கு
என்தலைவன் பொறுப்பு என
எதுவும் நீ செய்திடாதே
பற்றவன் மேல் கொண்டதனால்
பசலை கொண்ட தென் மேனி
நெஞ்சம் முழுக்க அவன் நினைவால்
தேகம் முழுதும் ஒரு
மெலிவு!’
கடவுளும் மன்னித்தார்
தலைவனும் தப்பினான்!
தற்காலம்:
குடித்து வந்தக் கணவன்
அடித்து அவளை துன்புறுத்த
பெண்மை யவள் தேகம்
பெருந் துயர் அடைந்தது!
மனைவிக்குத் துன்பம் தந்தவனை
மகளிர் நிலையக் காவலர்கள்
காவல் நிலைய கண்காணிப்பில்
கணவன் அவனை வைத்தனர்!
ஓடோடி வந்த மனைவியவள்
ஓவென்று அழுதுச் சொன்னாள்:
காயங்களின் காரணம் கணவனன்று
காலிடறி விழுந்ததனால் வந்ததென்று!
காதல் கணவன் காக்கப்பட்டான்
கவலைக் கடலிலிருந்து மீட்கப்பட்டான்!