பட்டாம்பூச்சிகள் பறக்கட்டும் இறைவா!
பட்டாம்பூச்சிகள் பறக்கட்டும் இறைவா!


பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும் அழகே அழகு!
இத்தனை நாள் நாம் இழந்திருந்த அந்த சுகம்
மீண்டும் நமக்கு கிடைத்திருக்கிறது.
நிலைக்க வேண்டும் இறைவா!
பட்டாம்பூச்சிகள் பறக்கட்டும் இறைவா!
கோவை என். தீனதயாளன்
இன்று காலை… (01-03-2022)…
தெருவில் என் பார்வை படர்ந்தது
சின்னச்சின்ன பட்டாம்பூச்சிகள்
சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கின்றன…
சில மிதிவண்டிகளில்..
சில இருசக்கரவாகனங்களில்..
சில பள்ளிப்பேருந்துகளில்..
சில ஆட்டோக்களில்..
சில மகிழ்வுந்துகளில்..
சில பொதுப்பேருந்துகளில்.. – அட
சில நடந்தும்
கூட..
தெருவே உயிர்த்தெழுந்திருக்கிறது
உற்சாகமான பரபரப்புடன்!
பறக்கட்டும்..
பட்டாம்பூச்சிகள் பறக்கட்டும்
பள்ளிக்கூடம் செல்லட்டும்
ஒன்றோடொன்று மனம்விட்டு பேசட்டும்
அளவளாவட்டும்..
அகம்மகிழட்டும்!
ஓடி ஆடட்டும்
ஒளிந்து விளையாடட்டும்
குதித்து மகிழட்டும்
கால்பந்து கைப்பந்து
;பேட்மின்டன்’ கூடைப்பந்து
என விளையாடி களிக்கட்டும்
ON லைன் இனி
GONE லைன் ஆகட்டும்!
ஆரோக்கியமாக ஆர்பாட்டமாக
அங்கிங்கெனாதபடி எங்கும்
வலம் வரட்டும்
ஆண்டவனே..
பெரியவர்களுக்காக அல்ல..
ஒரு பாவமும் அறியா
இந்த பிஞ்சுகளுக்காக
சின்னஞ்சிறுசுகளுக்காக
‘கொரனா’வைக் கொன்று போட்டுவிடு
எங்கள் குருத்துக்களை
குதூகலமாய்
நேர்ந்து கலந்து வாழ விடு!