பகல்
பகல்
மன்மதன் காமுகர்களின் மேல்
மலர்க்கணை
சொரியும் காலம்
தனது பாசறைக்கண் மலர்களாகிய
கணையைத் திரட்டி சேமித்து
போருக்கு முன் மன்மதன் தன்
கணைகளுக்கு நெய்தடவி
ஒளியூட்டியதைப் போன்று கட்டுடைந்து
விரிந்த மலர்த் திரள்களினால் தேன் ஒழுகியது.
மன்மதனின் காமநோன்பாகிய வசந்தவிழாவிற்கு
சோலை ஆயத்தம் செய்தது.
தேனாகிய நீரினைத்
தெளித்து
நுண்ணிய மகரந்தத்தூளை
மேல் தூவி
மலர்களாகிய தவிசுகளை
உள்ளிடங்களெல்லாம் இட்டு
வசந்தவிழாவிற்கு வரும் மாந்தர் யாவரும்
தங்கி மகிழுமாறு பூஞ்சோலை அழகு செய்தது.
குயில்கள் கூர்வேல் நிகர்த்த
கண்களை உடைய மகளிரின்
குரல்போல் காஞ்சி மலரைக்
குடைந்து அகவியது.
அக்காஞ்சி மலர்களின் கருநிற
மகரந்தத் தூள்கள்
கரிய ஆகாயத்தை மறைத்து
மேலும் இருள் செய்தன.
அதனைக் கார் மேகம் என எண்ணி
மயில்கள் மகிழ்ந்து ஆடின.
கோங்கை, வேங்கை, கொன்றை பூக்களின்
மகரந்தங்கள் எங்கும் பரவி இருந்தமையால்
அப்பூஞ்சோலையில் எப்பொழுதும் பகல் நிலவியது.