வெளிநாட்டு வாழ் தந்தை
வெளிநாட்டு வாழ் தந்தை


மூத்தவனாய் பிறந்தது உன் தப்பாபோச்சு
சுமையில் பாதியும் உனக்குன்னு ஆச்சு
பள்ளிக்கு போறதையும் மறக்க வைச்சு
பணத்தை சேர்க்க வெளிநாடு போயாச்சு
பள்ளிக்கு விடுப்பு முழுசா கொடுத்தாச்சு
பச்சிளம் வயதில் பெற்றோரை விடுத்தாச்சு
குடும்ப வளர்ச்சிக்கு ஆசையைத் துறந்தாச்சு
சமயம் வருமென காலத்தையும் கடந்தாச்சு
வாலிபனாய் வளர நாட்டுக்கே வந்தாச்சு
வரன்தான் அமைய திருமணமும் செஞ்சாச்சு
திருமணம் முடிஞ்சதோட வெளிநாட்டுக்கு போயாச்சு
மனைவிக்கிட்ட குழந்தை பாரத்தையும் கொடுத்தாச்சு
பாசமான மனைவியுடன் வாழவும் மறந்தாச்சு
தந்தை பாசத்திற்கு குழந்தைகளும் ஏங்கிருச்சு
மனைவி வாழ்க்கை போராட்டமே ஆகிடுச்சு
வாழ்க்கை போராட்டம் வாழத்தான் பழகிடுச்சு
குடும்பம் பெரிசாக பொறுப்பும் வலுத்தாச்சு
பணத்தை சம்பாதிக்க
மனசும் கல்லாகிடுச்சு
குடும்பத்தை பிரிஞ்சு வருஷமும் ஆகிபோ
ச்சு
குழந்தைகளும் உன்னை மறந்தே பழகிடுச்சு
மனசத்தான் கல்லாக்கி குடும்பத்த பிரிஞ்சுட்ட
ஆசையை மூட்டைகட்டி அலமாரியில் பூட்டிப்புட்ட
அப்பான்னு ஆசைக்கு கூப்பிடத்தான் எங்கிருந்த
அப்பா இருந்தும் பாசத்துக்கு ஏங்கவைச்ச
கொண்டுவரும் மிட்டாய்தான் குழந்தைகளை மயக்கிடுமா
வாங்கிவந்த சேலைதான் வாழ்க்கையை மாத்திடுமா
சேர்த்துவச்ச பணம் சேர்த்துதான் வைச்சிடுமா
சேராத வாழ்க்கை முழுமையும் அடைந்திடுமா
நாள்தோறும் வேலைசெஞ்சு உடம்பத்தான் கெடுத்துக்கிட்ட
நாங்கள் நல்லாருக்க வாழ்வதற்கே மறந்திட்ட
நாயகனாய் எங்களுக்குள் நீயேதான் வாழ்ந்திட்ட
நான்பட்ட கடனெல்லாம் எப்போநான் அடைச்சிட
வயசு எழுபதாகியும் வரத்தான் மனசில்லை
வாழவிட்ட வாழ்க்கையை தொடரத்தான் விருப்பமில்லை
பேரன் பேத்திகளும் தாத்தானு கேட்டிடுச்சு
கிளம்பி வந்துடுங்க நாங்களும் கூப்பிடுறோம்