நாய்
நாய்


செல்ல விரும்பிய இடத்திற்கு
சென்றபோது
முகத்தில் ஆடிய
சிலந்தி வலைகள்
நலமா என்றன!
சுவரில் மாட்டி இருந்த
செல் அரித்த குடும்ப புகைப்படம்
எப்போதோ சிரித்து
மகிழ்ந்ததை வெளிச்சம்போட்டுக்
காட்டிக்கொண்டிருந்தது!
சுவர் பெயர்ந்து
கிடந்த அலமாரி விளிம்பில்
அம்புலிமாமாவில் பூனை
கண்ணை உருட்டி
என்னைப் பிடிக்கிறாயா
என்றது!
பக்கத்தில் கிடந்த
கட்டில் நான் படுத்த
வரலாறை பறை சாற்ற
சுவரின் மூலையில்
அறிவியல் அந்தக்காலத்து
கண்டுபிடிப்பு தொலைக்காட்சி
இன்னமும் நான் இருக்கிறேன்
என நான்கு கால்களினால்
நின்றது!
மறதியாய் வீடு மாறி
வேறுஇடம் சென்றுவிட்டவேளையில்
உதவிய நண்பனை நினைத்து
ஆனந்தக்கண்ணீர் விட்டபடி
நான் வாலை இன்னமும் ஆட்டிக்கொண்டிருக்கிறேன்
மனிதர்களில்லா மாளிகையில்!