செம்மொழியாம் எம் தமிழ் மொழி
செம்மொழியாம் எம் தமிழ் மொழி
செம்மொழியாம் தமிழ்மொழி ... அதுவே எம் தாய்மொழி ..
அம்மொழியே என் தலை மொழி ... அதுவே என் வழி மொழி ..
மூன்றெழுத்தில் உலகாளும் எம் தாய்மொழி ... அதுவே என் தமிழ் மொழி ..
செந்நாவில் வாழும் செம்மொழி ... அதுவே என் உயிர் மொழி ..
உலகத்தில் செம்மொழிகள் ஏழுடன் வாழ்கிறது எம் தாய் மொழி ..
உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி .. எம் தமிழ் மொழி ...
எம்மொழிக்கு உயிரும் உண்டு ... மெய்யும் உண்டு ..
உயிர்மெய் கலந்த அன்பும் உண்டு ..
குமரிக்கண்டத்தில் பிறந்து ... அண்டமெல்லாம் வளர்ந்து ..
உலகத்தின் கடைக்கோடி மக்களையும் வியக்க வைக்கும் மொழி ...
எம் தமிழ் மொழியின் சிறப்பை அறிய வேண்டுமா ...புகழை உணர வேண்டுமா ...
பழகிப் பாருங்கள் ... எம்மொழியின் ழகர ஓசையை ...
தியானித்துப் பாருங்கள் ... எம்மொழியின் ஓம்கார ஓசையை ...
உச்சரித்துப் பாருங்கள் ... எம்மொழியின் அஃகின் ஓசையை ..
மூன்றடியில் உலகலந்தார் வாமனர் ... அது விஷ்ணுவின் அவதாரம் ...
இரண்டடியில் உலகலந்தார் வள்ளுவர் ... இது எம் தமிழ் மொழியின் அவதாரம் ..
தொன்மையை தொட வேண்டுமா ... அகத்தியம் உண்டு எங்களிடம் ...
இலக்கணத்தை இயம்ப வேண்டுமா ... தொல்காப்பியம் உண்டு எங்களிடம் ...
யாரையாவது புகழ வேண்டுமா ... புறநானூறு உண்டு எங்களிடம் ... ..
யாரையாவது அறிய வேண்டுமா ... அகநானூறு உண்டு எங்களிடம் ... .
காலில் அணியும் சிலம்பிற்கும் உண்டு சிலப்பதிகாரம் ...
கழுத்தில் அணியும் மணிக்கும் உண்டு மணிமேகலை ...
காதில் அணியும் குண்டலமா ... எடுத்துக் கொள்ளுங்கள் குண்டலகேசியை ...
அட... கையில் அணியும் வளையலா ... வளைத்து படியுங்கள் ... வளையாபதி ...
குறுந்தொகையில் குறுக்கிட முடியுமோ ...
ஐவகை நிலங்களை விளக்க எம்மொழியைக் காட்டிலும்
வேறு மொழியைக் காட்ட முடியுமோ ...
என்ன இல்லை எம் தமிழ் மொழியில் ...
எளிதல்ல ... எல்லாவற்றையும் எடுத்தியம்புவது ...
எல்லையற்ற மொழி எம் தமிழ் மொழி ...
அகத்தியன் தொட்டிலிட்டு ... தொல்காப்பியன் தாலாட்டி ...
கம்பன் சீராட்டி ... மூவேந்தர் பாராட்டி ...
வருடங்கள் ஈராயிரம் கடந்தாலும் ...
இன்றும் .. கன்னித்தமிழாய் ... செந்தமிழாய் .. வாழ்ந்து வரும் ...
செம்மொழியாம் எம் தமிழ் மொழி ....