திருநெல்வேலியில் ஐந்திணை நிலங்கள்
திருநெல்வேலியில் ஐந்திணை நிலங்கள்
திருநெல்வேலி
மண்ணின் மைந்தனாக
என்தாய் மண்ணின்
பெருமையை பேசுவதே
எனக்கு பெருமைதான்..
மேகங்கள் முத்தமிடும்
மேற்குத்தொடர்ச்சி மலையின்
தென்முனையில்
அகண்ட தேனடைகளை
சுமந்து நிற்கும்
பலவகை பழமரங்கள்
வானுயர
நிமிர்ந்து வளர்ந்திருக்கும்
வளமிகு குற்றாலமலை
குறிஞ்சி நிலப்பரப்பென்றால்..
பொதிகை மலையில் பிறக்கும்
குளிர் தென்றல்
தாலாட்ட தலையசைக்கும்
உயர்ந்த மரங்களும்..
மரங்களிடை வளர்ந்த
அடர்ந்த புதர்களும்..
புலிகள் உள்ளிட்ட
அனைத்து வனவிலங்குகளும்
இணைந்தும் மகிழ்ந்தும் வாழும்
முண்டந்துறை வனப்பகுதி
முல்லை நிலப்பகுதியாகும்..
பாய்ந்தோடி பசி தீர்க்கும்
வற்றாத பொருநை ஆற்றின்
இருமருங்கும் இயற்கையின்
பச்சை பசும் கம்பளம்
விரித்தது போல்
பெரும்பரப்பை போர்த்தியிருக்கும்
செழிப்பான வயல்வெளிகள்
மர
ுத நிலப்பரப்பாகும்..
வங்கக்கடலுக்கு மேல் திசையில்
கடல் போன்ற கடம்பா குளத்திற்கும்,
தாமிரபரணிக்கும் தென்திசையில்..
நிலப்பரப்பின் வட்டமான உட்பகுதி
என் தாய் நிலத்திற்கு
நெற்றியிலிட்ட
குங்குமத் திலகமாக
பரந்து விரிந்து படர்ந்திருக்கும்
உயர்ந்த தேரிகாடெனும்
செம்மணல் செரிந்தபகுதி
(செம்)பாலைத்திணை நிலமாகும்..
முத்துநகர் தொடங்கி குமரிக்கடல்
வரையிலும் நீண்டிருக்கும்..
செங்கதிரோன் எழுகையில்
தங்கமென மின்னும்..
வங்கக்கடலும்..
எங்கள் கடல் சார்ந்த
காயல் பகுதிகள்
மீன் மணம் கமலும்
நெய்தல் நிலப்பரப்பாகும்..
ஐந்திணைப் நிலப்பரப்பினையும்
தன்னகத்தே கொண்டிருக்கும்
திருநெல்வேலியின் பெருமையை
தமிழ் மண்ணின் பெருமையாக
தமிழகத்தின் சிறப்பாக
பகர்ந்தும்.. பகிர்ந்தும்..
தமிழனாக மகிழ்கிறேன்..
இரா.பெரியசாமி..