உறங்காத கனவுகள்..
உறங்காத கனவுகள்..
இருளோடு பயணிக்கும்
இரவுகளுடனான
அடுக்கடுக்கான
அனுபவங்களும்
கதைகளும்
எத்தனை...எத்தனை...
இமைகளை மூடி
உறங்கத்தொடங்கி
கனவு உலகத்தில்
நுழைந்த மறுகணமே,
நனவுலகத்து
நினைவின் தொடர்பு
கண் விழிக்கும்
வரையிலும்
தற்காலிகமாக
விலகி நிற்க...
கட்டுப்பாடில்லாத
கற்பனைகளைத்
தாண்டிய காட்சிகளோடு
மகிழ்ச்சியின்
உச்சத்திற்கு
அழைத்துச் சென்ற
தருணங்களுமுண்டு...
ஓட ஓட விரட்டி
குலை நடுங்க
வைத்த
ஆயுதமேந்திய
எதிரிகளையும்..
கடித்து உயிர்பறிக்க
துடித்த அரவங்களையும்
கண்டு மிரண்டதுமுண்டு.
மன்னனாகி மகிழ்ந்த
காட்சிகளும் உண்டு..
ஏதுமின்றி இரந்து
உண்டதும் உண்டு
விண்ணிலே சிறகின்றி
பறக்க முடிந்ததும்..
தண்ணீரின மேற்பரப்பில்
நடக்க இயன்றதும்..
பிரபலங்கள் அருகினில்
நெருங்கிப் பழகியதும்
சாத்தியமில்லாத எதையும்
சாதிக்க முடிந்ததும்
கனவுகளில் மடடுமே
சாத்தியமென்றாலும்..
கனவின் பெரும்பகுதி
நினைவில் நிற்பதில்லை..
என்கிற போதினிலும்
ஓவ்வொரு நாளிலும்
சிலமணி நேரங்கள்
இன்பத்தின் எல்லைவரை
அழைத்துச் சென்று
மனதை இலகுவாக்கியும்
மரணத்தின் விளிம்புவரை
அனுப்பி வைத்து
உளவியலுக்கு ஊறுசெய்தும்
உயர்வு தாழ்வு பாராமல்
உலகத்தில் யாவர்க்கும்
பாடஞ் சொல்லித்தருகின்ற
கனவுதான் இறைவனென்றால்
கனவு காணும் உறக்கமும்
இறைவனை நோக்கிய
எளியதோர் தவமே...
இரா.பெரியசாமி..