பறவைகளின் சிற்றுலகம்
பறவைகளின் சிற்றுலகம்
ஆற்றோரத்தில் வளர்ந்து
உயர்ந்து, படர்ந்து ,
நூறாண்டுகளைத் தாண்டியும்
நிமிர்ந்து நின்ற பெருமரத்தின்
நூற்றுக்கணக்கான கிளைகளில்
பல்லாண்டு காலமாய்
ஓராண்டு கூடத் தவறாமல்
பல்வேறு வகை வகையான
பல்லாயிரம் எண்ணிலடங்கா
வெளிநாட்டுப்பறவைகளும்,
உள்நாட்டுப் பறவைகளும்
நிம்மதியாய் கூடுகட்டி
இணைகளோடு மகிழ்ந்து
உறவாடி..
முட்டையிட்டுக் குஞ்சு பொரித்திட
மனமுவந்து இடமளித்து...
ஓங்கி வீசிய புயல்களையும்,
சுழன்றடித்த சூறாவளிகளையும்
உறுதியோடு எதிர்கொண்டு
அடைமழையிலும், கடுங்குளிரிலும்,
சுட்டெரிக்கும் வெயிலிலும்
தளராது நிமிர்ந்து நின்று,
உலகப்பந்தின் பல
மூலைகளிலிருந்தும்,
தன்னிழலை தேடிவரும்
அயல்நாட்டுப் பறவைகளுக்கும்
உள்ளூர்ப் பறவைகளுக்கும்
இடையிலே எந்தவித
பேதமும் பார்க்காமல்
தாய்போல அரவணைத்து
மனமுவந்து, அவை மகிழ
அகமுவந்து இடமளித்து..
வாழ்விடமாகவும், ஓய்விடமாகவும்,
சரணாலயமாகவுமிருந்த
பெருமரத்தின் உடலினிருந்த
சிறு சிறு ஊனங்களான,
மரத்தின் பொந்துகளுங்கூட
சில பறவைகளுக்கு
மகத்தான உறைவிடங்களாக
இருப்பதனைக் கண்டு
மரங்களுக்கும், பறவைகளுக்கும்
இடையேயான பிரிக்க
இயலாத வலுவான உறவு
எத்தனை உயரியதென
எண்ணிடத்தோன்றுகிறது...
பல்லாயிரம் பறவைகளுக்கும்
வீடாக இருந்த அந்த உயர்ந்த
மரத்தை வெட்டி சாய்த்து
உயிரரைப் பறித்த பின்னரதன்
உடலை வெவ்வேறு அளவுகளில்
துண்டிட்டு, மரக்கட்டைகளாக்கி,
தனக்காக வீடுகட்டி, தான் மட்டும்
வாழுகின்ற வீட்டின் கதவாகவும்,
சாளரமாகவும், கட்டிலாகவும்,
தொட்டிலாகவும் மாற்றிவிட்டு,
மீதமுள்ள மரத்தினையெல்லாம்
அடுப்பெரிக்க விறகாக்கியும்
அழித்து முடித்த மனிதன்..
அவனின்று வாழுகின்ற வீடு
பன்னெடுங்காலமாய்
ஆயிரமாயிரம் பறவைகள்
வாழ்ந்து மகிழ்ந்திருந்த
"பறவைகளின் சிற்றுலகத்தை"
அழித்து உருவாக்கியது மட்டுமல்ல...
இன்னும் பல்லாண்டுகள்
இன்னும் எத்தனையோ
ஆயிரக்கணக்கில் பறவைகள்
வாழ்ந்திருக்க வேண்டிய
"மகிழ்ச்சிகரமான உலகத்தையும்"
ஒருசேர அழித்து வடிவமைத்து
உருவாக்கியதென்று மனிதன்
என்றைக்காவது சிந்தித்ததுண்டா??
மரங்களைப் பற்றி சிந்திக்கவும்
பறவைகள் பற்றி கவலைப்படவும்
சிறிதளவு கூட நேரமொதுக்கிட
முனைப்பெடுக்காத மனிதன்
அறம் தவறிய மனிதனே..
இரா பெரியசாமி..