விழித்தெழு தோழனே!
விழித்தெழு தோழனே!
விழித்தெழு தமிழா!
விழித்தெழு!
கண்முன் காணும் அநியாயங்களை
விழிகள் மூடிக் கடந்து போகாமல்
உனக்குள் ரௌத்திரம் பழகி
அகிம்சை ஆயுதம் தரி!
உன்னைச் சுற்றிப் பற்றிப் படரும்
நச்சு சாதி வேரில்
அறிவுக் கோடரியை ஓங்கிப் போடு!
சக மனிதரைக் கொல்லும்
தீங்கு விளைவிக்கும் மதவெறியினை
மானுட மண்வெட்டி கொண்டு
ஆழப்புதை!
சாமானியனை நசுக்கும்
திறந்தவெளிச் சந்தைப் பொருளாதாரத்தை
சுதேசியெனும் கூர்கடப்பாறையால்
தகர்த்தெறி!
நாட்டின் வளங்களையெல்லாம்
பெருவணிக முதலாளிகளின் நல்வாழ்விற்காகவே
சுரண்டிக் கொழுக்கும்
சூழ்ச்சி அரசியலுக்குத்
ஒருவிரல் புரட்சியால்
தாமதிக்காமல் பழுக்க சூடு வை!
இனி -
வீட்டுக்கொரு மரம் மட்டுமல்ல...
மனிதமும் வளர்ப்போமென
நெஞ்சுறுதி கொள்
எனதருமை தோழனே!