உருமாறும் புனிதவதிகள்!
உருமாறும் புனிதவதிகள்!
பலதடவை
சொல்லியாயிற்று;
கெஞ்சியாயிற்று;
எச்சரித்துமாயிற்று.
சற்று கூட கேட்பதாகவே இல்லை நீங்கள்!
அத்துமீறுவதும் நோட்டம்விடுவதும்
கள்ளத்தனமாகப் பார்வையிடுவதிலேயே
கழிந்து போகின்றன உம் பொழுதுகள்.
நாடோறும் எனக்கே உரித்தான என் சிற்றறைக்குள்
நானொரு ஆதிமனுஷியாக பரபரப்பது கண்டு
நீங்கள் பேரச்சம் கொள்ளவோ,
உலராமல் காற்றில் கசியும்
என் புலம்பல்களும் விசும்பல்களும்
உங்களுடைய குரல்வளையினை நெரிக்கவோ,
படிந்து விட்ட குருதிவாடைக் குடலைப் பிறட்டவோ,
அனல் மூச்சுக் காற்றில் பொசுங்கிச் சாம்பலாகவோ கூடும்.
ஆளுயர ஆடிமுன் இப்போதென்னை
அருவருப்பாக உணர்கிறேன்...
கைகள் இரண்டிலும் குருதி சொட்டச்சொட்ட
ஏராளமான உங்களது திருட்டு முழிகள்!