மரம் பேசும் அறம்
மரம் பேசும் அறம்
எங்களது புதைந்த
பாதமும் விரல்களுமான
படர்ந்த வேர்களை
புதைவடம் புதைப்போரும்
புதைகுழாய் பதிப்போரும்
மழைநீர் வடிப்போரும்
வரைமுறையும், வரையறையும்
இல்லாமல் அவரவர் போக்கில்
முறை வைத்து தோண்டி
வதைத்து காயப்படுத்தியும்
சிதைத்து துண்டாடியும்..
விளம்பரப் பலகைகளை
கட்டித் தொங்கவிட
கூர்மையான ஆணிகளை
எங்களின் உடலெங்கும்
ஆழமாக அறைந்தும்
கம்பியால் கட்டியும்
கத்தியால் வெட்டியும்
சுத்தியால் தாக்கியும்
சித்திரவதை செய்தும்...
மின்சார கம்பிசெல்லும்
பாதையென்று கூறிக்கொண்டு
எங்களின் கரங்களை வெட்டி
எங்களை பகுதி ஊனமாக்கியும்,
தொலைக்காட்சி , வலைதள
கம்பி வடங்களை
கண்டபடி கழுத்தில் சுற்றி
கழுத்தை நெறித்தும்
கைகளை இழுத்துக்கட்டி
கரங்களை முடக்கியும்..
நாள்தோறும் ஏதேதோ
புதுப்புது வழியில்
தொடர்ந்து துன்புறுத்தி
வதைத்திடும் மாநகரில்
வாழும் நாகரிக மனிதா!
எதிர்பார்ப்பு ஏதுமின்றி
உனக்கு நல்லதை
மட்டுமே தொடர்ந்து
செய்திடும் எங்களை
தொடர்ந்து வதைத்திடும்
உனது செயல் சரியா??
நீ..
உயிர்வாழ
நாங்கள்தான்
உயிர்வாயு உற்பத்தி செய்து
தருகிறோமென்ற உண்மை
உனக்கு புரிந்திருந்தாலும்
பரிவின்றி எங்கள் உயிர் பறிக்க
துணிந்திடும் உனது அரக்க
குணத்தை மாற்றிட மாட்டாயா??
தலையால் கோடையின்
கொடிய வெயிலைத் தாங்கி
பல்லுயிர்கள் இளைப்பாற
எங்களுக்கடியில் நாங்கள் கொடுக்கும்
குளிர் நிழலின் அருமையை
முழுமையாய் நீ அறிந்திருந்தும்
துளியும் நன்றியுணர்வின்றி
எங்களை கொடூரமாகக் கொலை
செய்ய எத்தனிக்கும் செயலை
எண்ணி தலைகுனிய மாட்டாயா ??
எங்களை எவ்வளவு நீ
வதைத்தாலும், கொன்றாலும்
மரங்களான நாங்கள்
ஒருபோதும் மாறமாட்டோம்...
உயிரிருக்கும் போது செய்யும்
சேவை போன்றே இன்னும் பல
சேவைகளை இறந்த பின்னும்
குறைவின்றியும் அயர்வின்றியும்
தவறாது தொடரந்திடுவோம்..
படுக்கும் கட்டிலாகவும்,
அமரும் நாற்காலியாகவும்,
வசிக்கும் வீட்டின் பாகங்களாகவும் ,
குழந்தைகளின் தொட்டிலாகவும்
அலங்கார பொருட்களாகவும்,
அழகிய அலமாரிகளாகவும்,
நீ ஏறும் மேடையாகவும்,
உன்னை சுமக்கும் பாடையாகவும்
இன்னும் பற்பல
புதிய பரிமாணங்களில்..
இரா.பெரியசாமி..