பனை மரங்களே..கற்பக மரங்கள்
பனை மரங்களே..கற்பக மரங்கள்
எம்மண்ணில்
எம் வாழ்வோடு கலந்து போன
பனை மரங்களின் பெருமையை
எங்ஙனம் பட்டியலிட??
எம்முன்னோர்கள் குடியிருந்த
குடிசை வீட்டின் கூரையின்
கட்டைகளும் , சட்டங்களும்
பனையின் பங்களிப்பென்றால்
அதில் வேய்ந்த கூரையும்
பனைதந்த ஓலைகளே..
கட்டைகளயும், சட்டங்களையும்,
ஓலைகளையும் இணைத்து கட்டியதும்
பனைமட்டை நார்களேயாகும்..
சுட்ட ஒட்டு கூரையின்
ஓடுகளை சுட்ட விறகும்,
ஓடுகளை தாங்கும் கட்டைகளும்,
விளைந்த பனையின் வளைகளே..
பழங்கால கிராமத்து காரை வீட்டு
கூரைகளையும் பனைமரக்கட்டைகளே
நூறாண்டு காலத்திற்கு தாங்கி நிற்கும்..
வீட்டிற்கு கதவுகளும், சன்னல்களும் ,
தூண்களும், கூட பனைமரங்களின்
பாகங்களேயென்றால்,
வீட்டினுள் கட்டிலும் , பக்குவமாய் கிழித்த
பனைமட்டை நாரில் பின்னிய நார் வலையை
தாங்கிய பனை மரக்கட்டில்களே..
குட்டி வடலிப்பனையின் ஓலையில் செய்த
கைவிசிறி வீசிட வரும் காற்று
தென்றலையும் தோற்கடிக்கும்..
பனை ஓலை விசிலும் பொம்மைகளும்
கிளுகிளுப்பையும் குழந்தைகள்
விளையாட பனைதந்த பரிசுகளாகும்..
சுவையான பதநீரும்,
பதநீரை காய்ச்சி எடுக்கும்
கருப்பட்டி கற்கண்டு வகைகளெல்லாம்
உடலுக்கு நலம்தரும் இனிப்புகளாகும்..
ஓலையில் செய்த பட்டைகள்
பானங்கள் பருகிடவும்,
உணவு அருந்திடவும்
ஒருமுறை உபயோக பாத்திரமாகும்..
பனை நாரிலும் ஓலையிலும்
கண்கவர் வண்ணம் தோய்த்தெடுத்து
செய்த பெட்டிகளும், பாய்களும்
மக்களின் வாழ்வோடு ஒன்றிப்போகும்..
இளம் நுங்கும், பனம்பழமும்
சுவையான நலம்தரும் உணவென்றால்,
பனங்கொட்டை முளைத்து கிழங்காகும்,
ஒருவேளை கிழங்காகும் முன்னாலே
கருகி போனாலும் சுவையான தவுனாகும்...
பனையின் வேர் கூட மனிதனின் திறமிகு
கைப்பட அழகிய கூடையாக உருமாறும்..
துடைப்பமும் பனைமரத்தின் கருணையாகும்..
உறியும் கிண்ணமும், பிறிமனையும்
பனைநாரில் உருவாகும்..
பனை மட்டை உணவுகிண்ட துடுப்பாகும்..
குறுத்தோலை அலங்காரத்தோரணமாகும்..
அதில் இனிப்பிட்ட மாவு வைத்து
மடித்து ஆவியில் வேகவைத்தால்
மணமிகு சுவையான எம் பாரம்பரிய
பலகாரம் ஓலைக்கொழுக்கட்டையாகும்..
தேக்கரண்டி தேவைக்கும்,
சிறுவர்கள் விளையாட காற்றில்
சுற்றும் விசிறிக்கும்
சிறுதுண்டு ஓலைகள் போதும்
மாட்டுக்கொட்டில்களும்
மாட்டுத்தாவணிகளும்
பனைமரத்தின் கருணையென்றால்,
பனைமரப்பகுதிகள் மாட்டுவண்டி
உள்ளிட்ட விவசாயக்கருவிகளின் பாகங்களாகும்..
அனைத்திற்கும் மேலாக அன்னைத்தமிழின்
அனைத்து அற்புத இலக்கிய படைப்புகளையும்
சில ஆயிரமாண்டு காலங்களாய் பாதுகாத்து
இன்றைய தலைமுறைக்கும்,
இனி வரும் தலைமுறைக்கும்
பயனளிக்கும் வகையில் கொண்டு சேர்த்த
ஓலைச்சுவடிகளும் பனையின் சுவடுகளே..
மொத்தத்தில் தமிழகத்து கிராம மக்களின்
தினசரி வாழ்வோடு கலந்து போன
பனைமரங்கள், அளவிலா செல்வங்களை
வாரி வழங்கிடும் கருணையின் வடிவுக்கும்
மேலான எங்குலதெய்வத்தின் கொடையாகும்...
பனைமரங்களை கற்பக விருட்சங்களென்றழைப்பதை காட்டிலும்
கற்பக விருட்சங்களே பனமரங்கள்தான் என்பதே சரியாகும்..