ஒரு குழந்தையின் தாகம்…
ஒரு குழந்தையின் தாகம்…
நான் பிறக்கும் முன்பே பட்டம் பெற்றவள்!
சாதாரணம் அல்ல! எம்.பி.பி.எஸ்.!
ஆம்! நான் மருத்துவர்! இது பெற்றோரின் கனவு!
அதுவும் மண்ணில் வந்து பிறக்கும் முன்பே…
நான் ஆணா? பெண்ணா?
கருப்பா? சிவப்பா? எதுவும் தெரியாது!
என் பட்டம் மட்டும்தான் எம்.பி.பி.எஸ் !
அடடே..... பட்டம் வாங்க நான் படும் பாடுகள்?
காலை எட்டு மணிக்கே சிறப்பு வகுப்பு!
பகல் முழுவதும் பள்ளிப் பாடங்கள்…
மாலை ஆறு மணிக்கு சிறப்பு வகுப்பு முடிந்ததும்
மீண்டும் தனி வகுப்பு ஒன்பது மணி வரை!
சிறப்புப் பாடத்திற்கு….
சிறப்புக் கவனம் வேண்டும் அல்லவா?
நான் மருத்துவர் ஆக வேண்டுமே!
இப்படியே வாரத்தின் ஆறு நாட்கள்..
ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள் என்று
வேதங்கள் மட்டுமே சொல்கிறது!
காலை 9மணி முதல் 4.30 வரை நீட் வகுப்பு….
மாலை வீடு திரும்பியதும்….
இல்லை… இல்லை… பள்ளி முடிந்ததும் நேரே
ஆறுநாள் சிறப்பு வகுப்பிற்கான தேர்வுகள்
ஞாயிறு தோறும் இரண்டு!
இரவு 9 மணிக்கு வீடு திரும்பி…..
மீண்டும் வழக்கம் போல்!
இந்த உணவு பிடிக்குமா? இந்த கனவு பிடிக்குமா?
உண்டேனா? உறங்கினேனா?
காலில் சக்கரம் கட்டிக்கொண்டு....
ஓட்டமும் நடையுமாய் ஓடிமுடித்து....
உறங்க மட்டுமே வீட்டினுள் அனுமதிக்கப் படுகிறேன்
கா
லை உணவை நான் விழுங்கித்தான் செல்கிறேன்!
உறவினர் சொந்த பந்தங்கள்.. ஏன்?
வீட்டு விசேஷங்களைக் கூடக் கண்ணால் கண்டதில்லை!
விழிமூடி நிம்மதியாய் உறக்கம் கொண்டதில்லை!
12 ஆம் வகுப்பு வரை படித்தது ஒரு முறை…
நீட்டுக்கு படிப்பது ஒரு முறை….
தினம் தினம் பதின்மூன்று மணி நேரம் படிப்பு….
உண்ண நேரமில்லை….
உறங்க நேரமில்லை….
ஓய்வெடுக்க நேரமில்லை….!
புத்தகங்களை விட்டு விட்டு…
புத்துணர்ச்சி பெற வழியுமில்லை….
வாழ்கிறேன் புத்தகங்களோடு…!
உறக்கம் கொண்டு….உறக்கம் கலைகிறேன்… புத்தகங்களில்!
படித்து..படித்து மூளை களைத்தே போனது!
உட்கார்ந்து உட்கார்ந்து எலும்புகள் தேய்ந்தே போனது!
தேர்வு எழுதி..எழுதி...கரங்கள் சோர்ந்தே போனது!
உற்றுப் பார்த்தே விழியும் வறண்டு போனது!
கனவு கண்டவர்களோ உறக்கத்தில் கனவு காண்கின்றனர்!
நானோ கண் மூட வழியில்லாமல்….
மருத்துவர் கனவை நனவாக்க
அல்லும் பகலும் ஓடிக்கொண்டே இருக்கிறேன்!
ஆட்டுவித்த பொம்மையாய் ஆடிக் கொண்டிருக்கிறேன்!
ஊமையாய் உள்ளத்தில் வைத்தே வாடிக்கொண்டு இருக்கிறேன்!
என்று தணியும் என் மருத்துவ தாகம்?
என்று குறையும் என் படிப்பு நேரம்?
என்று உறங்கும் என் விழிகள் விடியும் வரை?
என்று முடியும் என் சோதனை?