விடுங்கள்.....
விடுங்கள்.....


பாறைகளில் உளி தீண்டாது...
அழகான சிலை எங்ஙனம்?
களைச்செடிகள் எடுக்காது
பயிர்கள் வளர்வது எங்ஙனம்?
பூச்சிகளுக்கு மத்தியில்
புது மகசூல் எங்ஙனம்?
அடிபடாமல் மிதிவண்டி
கற்றுக் கொள்வது எங்ஙனம்?
தீயிலிடாது தங்க ஆபரணம்
அங்கங்களுக்கு எங்ஙனம்?
வலியின்றி வாழ்வா?
சுட்டெரிக்கும் சூரியன் தான்
காய்களை கனிய வைக்கிறது!
மிதிபடும் மண் தான்
வளைந்து கொடுத்து பாத்திரம்!
கொழு முனையால் கீறப்பட்ட நிலமே
நல்ல விளைச்சலைத் தரும்!
சமூகமே...
ஓர் ஆசிரியன் என்போன்
சிற்பி
மாணவன் என்போன் பாறை
விடுங்கள் ஒலி(உளி) கொண்டு
வேண்டாத பாகங்களை உடைத்து எறியட்டும்!
அழகான சிற்பமாய் இவன் காட்சித் தருவான்!
ஆசிரியன் என்போன் விவசாயி
தக்க சமயத்தில் களை நீக்கி&nbs
p;
நல்ல விளைச்சலை இந்த நாட்டிற்கு தந்திடுவான்!
அவன் ஓர் ஓதுவார்....
அவன் ஓதும் மந்திரங்கள்
இவன் மனதைப் பண்படுத்திவிடும்!
கரங்களை ஒடித்து
வசவுகளால் இடித்து
அவன் மனதில் அடிக்காதீர்!
தன் பிள்ளையென தோளில் தூக்கி
தான் கற்ற வித்தைகளை எல்லாம் வஞ்சனையின்றி மனதில் ஏற்றி
அவன் வெற்றியை தோல்வியை தனதாக்கி....
அடித்தாலும் இடித்து உரைத்தாலும்
வசவுகளை வாரி வாரி இறைத்தாலும்
மாணவன் நலன் ஒன்றே
பலனாய் பயனாய் எண்ணித் துய்த்திடும் ஏந்தல் அவன்!
அவன் கரங்களைக் கட்டவிழ்த்து விடுங்கள்!
ஊருக்கு அடங்கா பிள்ளைகளும்
குருவின் மந்திரக் கோலுக்கு
தந்திரக் குரலுக்கு அடி பணிவான் !
வலிமையான வளமான சமூகத்தை
வழங்கிடும் வள்ளல் அவன்!