பாலம் உடைந்தது!
பாலம் உடைந்தது!
பாட்டி....
உனக்காகப் போட்ட கீற்றுக்கொட்டகை
ஆடுகளின் கூடாரம்!
நீ படுத்த கோணிப்பை ஆடுகளுக்குப் படுக்கை!
உனக்கு நிழல் தந்த வேப்பமரம்....
சற்றே வளர்ந்து படர்ந்திருக்கிறது!
கரடு முரடாய் .... மேடு பள்ளமாய்...
கிடந்த களமானது...! அழகான தளமானது!
செடிகள்.... கொடிகள்..... எல்லாம் இருந்தன!
உன்னை மட்டும் காணவில்லை!
உன் அழைப்பின் ஓசைக் கேட்கவில்லை!
மனம் கணத்தது! கண்கள் பனித்தன!
உள்ளேயிருந்து மே....... மே.......
ஆட்டின் அழைப்பு ஒலி!
அழாதே! நான் உன்னோடு தான் இருக்கிறேன்! ஆறுதல் கூறினாயோ?
ஆட்டின் வடிவில் வந்து!
வந்துட்டீயா சாமி! வார்த்தை....
என் காதுகளை வந்து எட்டவில்லை!
என் கண்ணு! என் பொன்னு!
கொஞ்சல் கொஞ்சமும் கிட்டவில்லை!
உன் தளர்ந்த கரங்களால் என் மேனியை தழுவிட நாதியில்லை!
என்ன சாப்பிடுகிறாய்? அரக்கப்பறக்க ஓடிட கால்கள் இல்லை!
இடுப்பு லாக்கரில் எங்களுக்காகப் பதுக்கி வைத்திருந்த பணமுடிப்பைக் காணவில்லை!
மாங்காய் பறித்துக் கொண்டு போ!
கீரைப் பறித்துத் தாரேன்!
எள்ளு... உளுந்து தாரேன்!
மல்லாட்டை முந்திரி தாரேன்!
கம்பு சோளம் தாரேன்!
மூட்டைகள் கட்ட ஆட்கள் இல்லை!
விழுந்து விழுந்து கவனிக்க கரங்கள் இல்லை !
இன்னும் நாலுநாள் என் கூட தங்கிவிட்டு போயேன்! அங்கலாய்க்க மனம் இல்லை!
கால்கள் இடறி.... கைத்தடியூன்றி காத தூரம் நடந்தே வந்து....
கண்ணில் மறையும் வரை.... பார்த்துப் போ!
போயிட்டு வர்றீயா சாமி.... ப
ாசத்தோடு வழியனுப்ப விழிகள் இல்லை!
பொன் வேண்டாம்! பொருள் வேண்டாம்!
உன் பாசமான நெஞ்சம் போதும்! இன்னும் ஒரு ஜென்மம் தஞ்சம் புகுவோம்! பாசத்திற்கு பஞ்சம் ஆனது!
நாட்கள் நகர்ந்தன! உறவுகள் தகர்ந்தன!
பாட்டி வீட்டின் பாதைக்கு பாலமாய் நீயிருந்தாய்!
பாலம் உடைந்தது.. பாதை மறைந்தது!
எங்கு தேடுவோம்!?எங்கு காண்போம்?
எப்படி தொடர்வோம்? நம் பாசப்பிணைப்பை..
பாட்டியின் பாசத்தை இழந்து வாடும் அனைத்து பெயரக்குழந்தைகளுக்கும் சமர்ப்பணம்
💐💐💐💐💐💐💐💐💐