அர்ப்பணிப்பு
அர்ப்பணிப்பு
அழகிய நினைவுகளோடு நாங்கள்
ஆண்டு 2020-ஐ எதிர்கொண்டோம்!
மூன்று மாதங்களே உருண்டோட எங்கிருந்தோ எங்கள்
மூச்சுப் பைகளை அடைக்க வந்தாயே! கோரணி நச்சிலே…
உலக நாடுகளையே உலுக்கி எடுத்து
உயிர்ப் பலி பல கோடி கொண்டாயே
உன் கொலைவெறி தாகத்தில் எங்கள்
உலகம் கண்டதே பற்பல அர்ப்பணிப்புகள்!
கனத்த பாதுகாப்பு உடை தன்னை
கணக்கிலா மணித்துளிகள் தரித்து
முகக்கவரி அணிந்து முகஞ்சுழிக்காமல் தொண்டு செய்து
இறந்த பின்பும் உடனிருந்து உரிமையுடன் வழியனுப்பும்
எங்கள் முன்னிலை பயணர்களின் தலைச்சிறந்த அர்ப்பணிப்பு!
வெய்யிலும் மழையும் பொருட்படுத்தாது
வியர்வை வழிய சாலைகளில் வீரத்துடன் நின்று
காவல் காத்து சட்டத்திட்ட மீறலை தடுத்து
கண்காணித்து பணிபுரிந்த எம் காவல்துறையின் அர்ப்பணிப்பு!
நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையின்
நடவடிக்கைகளை சிரமேல் ஏற்று
மனமகிழ், பிறப்பு, இறப்பு, திருமணம் போன்றவற்றை
மனபாரத்துடன் தனித்து அனுசரித்த மக்களின் அர்ப்பணிப்பு!
உலகமே ஓலமிட்டு அழும் நிலமைக்கு
உரியவன் செய்த தவறுதான் என்ன?
புகார் கூற இறைவனிடம் பக்தர்கள் செல்ல
புவிகாக்கும் இறைவனும் கதவுகள் மூடி அர்ப்பணிப்பு!
துள்ளித் திரிந்து பள்ளியில் பயிலும் தருணங்களையும்
தேர்வு கால மாற்றங்களையும் குரு போதனை பெறாமலும்
இன்னல்கள் பல பாடங்களில் பெருகி வாட்டிட
இயங்கலை போதனையை சந்தித்த மாணவமணிகளின் அர்ப்பணிப்பு!
இத்தனை அர்ப்பணிப்புகளை நாங்கள்
அர்ப்பணிக்க காரணமான கோரணி நச்சிலே…….
உன்னால் இவ்வுலகில் மனிதம் தழைத்து ஓங்க
ஒரு வாய்ப்பு எமக்கு தந்தாயே…..
உன்னால் இயற்கை அன்னை உயிர் பெற்றாள்
தாய்சேய் , உறவுகள் அன்பு பன்மடங்கு பெருகிற்று
கொலை களவு பெருமளவு குறைந்து போனது
மனிதாபிமான உதவிகள் உச்சத்தை அடைந்தன
இவையாவும் எமக்காக நீ உருவாக்கிய அர்ப்பணிப்புகளே!