விழித்திடு வாக்காளனே!
விழித்திடு வாக்காளனே!


தேர்தல் வரும் பின்னே வாக்கு
கேட்க வருவார் முன்னே- முன்கொடுத்த
வாக்கு நிலைகேளா வாக்காளர் உள்ளவரை
இவர் ஏமாற்றி பிழைப்பார்!
கைபிடித்து வணங்குவார் காலில் விழுவார்
கண்டுகண்டு சிரிப்பார் காசு கொடுப்பார்
கைநீட்டி வாங்கி வாக்கினை விற்பார்
கொடுத்தவரினும் தரம் தாழ்ந்தார்!
தந்தை தந்தையின் தாயார் தாயாரின்தந்தை
ஆண்டாரின் தலைமுறை தன்முறை கோருவார்
அரசுரிமை அவர்குல பிறப்புரிமை அல்ல
என்றுசொல்லார் அடிமையாய் பிழைப்பார்!
ஏனென்று தெரியாமலே நித்தமொரு போராட்டம்
சாலைதோறும் மறியல் கொடி பிடிப்பார்
குரல் கொடுப்பாரை கேளாதார் உள்ளவரை
போராட்டம் தொடர் போராட்டமே!
சாதிமறுப்பு பாசிசம் மதவாதம் அடங்கமறு
அத்துமீறு என்பாரின் மறையாத கொண்டை
கண்டு கொண்டார் நாட்டு நடப்பு
நன்கு அறிந்து தெளிந்தார்!
திராவிடம் ஆரியம் கம்யூனிசம் மார்க்சியம்
தமிழ் தேசியம் பேசுவார் நாட்டிற்கு
தேவை இல்லாத ஆணி என்று
தெரிந்தார் அறிவில் சிறந்தார்!
வெளிநடப்பு செய்தே வீண் பொழுது
போக்கியோரை வைத்து செய்திட அவர்
வாக்கு கேட்க வருங்கால் வெளிநடப்பு
செய்தே புத்தி புகட்டுவார்!
மது விலக்கு போதையில் மதி
மயங்கி விழாதார் அவர்தம் மது
ஆலை எல்லாம் இழுத்து மூடியபின்
பேச வரச்சொல்வாரே மீள்வார்!
நீட்விலக்கு நிலவரம் அறிந்தார் தகுதிஉயர
பள்ளிக் கட்டமைப்பும் ஆசிரியருக்குப் பயிற்சியும்
புதிய பாடத்திட்டமும் கேட்பார் அவர்தம்
பிள்ளைக்கு செய்யும் பெரும்சீர்!
கச்சத்தீவு மீட்பென்ற மாயவலை சிக்காதார்
பொதுத்தீவென்ற தீர்வும் நிரந்தர மீன்பிடி
உரிமையும் கேட்டாரை கடல்நீரில் உப்பு
உள்ளளவும் மீனவர் வாழ்த்துவார்!
காவிரி பாலாறு பெரியாறு உரிமைபேச்சு
பசிதாகம் தீராது கடைமடைக்கு ஆழாக்கு
நீர்கொண்டு சேராது என்று உணர்ந்தார்
மழைநீர் ச
ேர்ப்பாரை ஏற்பார்!
ஆற்று நீரிலில்லை கானல்நீரில் கரையும்
பேச்சறிந்தார் ஆற்றுநீர் இணைக்க அணைக்க
வழிமுறையும் ஆற்று மணலுக்கு ஆற்றுதலும்
கேட்பார் தரணிக்கே தாயாவார்!
கல்வி நகை விவசாயகடன் தள்ளுபடி
கூறுவார்தம் நாற்பது லட்சம் கோடி
கடன் அடைக்க வழிகேட்டார் மாநிலம்
மீட்ட பெருமை கொள்வார்!
ஆனை அம்பாரி அம்புலி இலவசமென்றே
அள்ளி விடுவார்தம் அடிப்படைவசதியும் கல்வி
சாலையும் மருத்துவம் நல்லவேலையும் கேட்டார்
சுயமாய் மரியாதையும் பெற்றுவாழ்வார்!
விவசாயி என்பார் சோறு வந்த
வழி அறியாதார் அவர்தம் வெள்ளாமை
வீடு வந்துசேராது என்றறிருந்தார் ஆள
நினைத்தார் அறிவும் அறிந்தார்!
விளைந்த பொருளுக்கு விளைத்தவன் சொல்லும்
விலையும் தரகர் இல்லா விற்பனையும்
விளைநிலம் விலைநிலமாக தடையும் கேட்டார்
விவசாயி மனம்போல் வாழ்வார்!
மண் மரஞ்செடிகொடி ஆடுமாடு மனிதனை
மலடாக்கும் மருந்துக்கு மருந்தும் இயற்கை
முறை வேளாண்மையும் கேட்டார் தலைமுறை
நோயின்றி நூறாண்டு வாழ்வார்!
கோயிலிடம் சொந்த இடமாகும் என்பார்க்கு
சிவன் சொத்து குலநாசம் பதிலுரைத்தார்
கோயிலும் குளமும் பக்தனே நிர்வகிக்கவும்
கோரினார் விண்ணுலகில் இடம்பெறுவார்!
ஊழல் ஒழிப்போம் என்பார்தம் பெற்றார்
உற்றார் எடுப்பு தொடுப்பு சொத்து
கணக்கு வழக்கு கேட்பாராயின் வந்தவர்
சொல்லிக் கொள்ளாமல் சென்றிடுவார்!
எரிகின்ற கொள்ளியில் நற்கொள்ளி தேடி
உள்ளதில் நல்லானை கடைந்தெடுத்து பக்தி
புத்தி உள்ளார்க்கு வாக்கு அளித்தார்
தேசம் நல்லரசு வல்லரசாகும்!
நம் விரலிடும்மை நம்வீட்டை படும்பாட்டை
நம் நாட்டை கழனிக்காட்டை நம்நாளை
நம்மை காக்கும் ஒற்றைஆயுதம் என்றறிவார்
நாட்டினில் சிறந்த வாக்காளராவார்!