பொய்க்கால் குதிரைகள்
பொய்க்கால் குதிரைகள்
சீவிமுடித்து சிங்காரித்து
அணிகலனிட்டு அலங்கரித்து
குழம்பியற்ற மரக்கால் தரித்து
திறனற்ற நளினம் பயிற்று
ஆட்டிவைத்தார் பெண்களை
பொய்க்கால் குதிரைகளாய்!!
ஆடிய ஆட்டம் போதும்
கழட்டியெறி போலி ஆபரணங்களை
கூடிய கூட்டம் போதும்
கலைத்துவிடு கேலிக் கூத்துகளை
பொய்த்த குதிரைகள்
மரக்கால்கழட்டும் நேரமிது
காலைச்சுற்றிய பழம்பாம்புகள்
வாலைச்சுருட்டும் காலமிது
குதிரைத்திறன் அறிவாய்
குழப்பமேன் பெண்ணே!
முதலடி வைக்கையில்
வன்மையான விமர்சனம்
கல்லடியாய் வந்து விழும்
மென்மையாகக் கடந்துசெல்
திண்மையான மனதோடு
திறந்த உதடுகள்
புரட்சியாய் வெடிக்கும்
திறக்காத உதடுகள்
மிரட்சியைக் கொடுக்கும்
அவர் பயம் வீழ்ச்சியின் அறிகுறி
உனது வெற்றியின் முதற்படி.
“அவள் அப்படித்தான்”
முத்திரை குத்தப்படுவாய்
ஊர்ஜிதத்தின் குறியது!
உன்னை உனக்குக்
காட்டிக் கொடுக்கும்
மந்திரச் சொல்லது
நான் இப்படித்தான்
என்ற மறுபிறப்பிற்கான
அவர்கள் தூவிய விதையது
நம்பிக்கை நீரூற்றி
அதை வளர்த்து விடு
‘அப்படித்தான்’ நீ
முதலில் முளைக்கத் துவங்குவாய்!
படித்த கர்வம்
“தலைக்கனம்” என்பார்கள்
பகுத்து அறியும்போது
தலை சற்றே
கனக்கத்தான் ச
ெய்யும்
பாரம் தாங்கமுடியாத
அர்ப்பப் பதர்கள்
காற்றின் விசையில்
காணாமல் போவர்
அறிவின் கணத்தை
வாரி சேர்த்துக்கொள்
பிரபஞ்சத்தை நிர்ணயிக்கும்
ஈர்ப்புவிசை பார்த்துக்கொள்ளும்
உன் கனத்தின் சுமையை!
"புறக்கணிக்கப்படுவாய்”
தனித்துவத்தின் அடையாளமது
தனிமைச் சவாரி
ஏளனத்திற்கு உற்பட்டது- எனினும்
வானளக்க ஏற்பட்டது
அகங்கணித்து உன்
ஆற்றலை உணர்ந்திடு
சிறகுகள் முளைக்கும்
முதலில் புறக்கணிக்கப்பட்டவையே
அதிகம் அரவணைக்கப்பட்டவை
உலகியல் கோட்பாடுகள்
அத்துணையும் அதற்கு சாட்சி!
"அடங்காபிடாரி" என்ற
சான்றளிக்கப்படும்
அது பறப்பதற்கான
நுழைவுச்சான்று
வானம் புலப்படும்
சுதந்திரக் காற்றை
சுவாசிக்கத் துணிவாய்
நேர்மை, அச்சமின்மை
ஞானம், நிதானம்
ஆகிய இறகுகளைத்
தைத்துக் கொள்-உன்
பெண்மைச் சிறகினில்
வானுயரப் பறப்பாய்!
வாய்பிளந்து பார்க்கும்
பொய்க்கால் பூட்டிய
பொய்யர் கூட்டம்!
ஏதோ ஓர் ஆபாச சொல்
உயரத்தின் காற்றழுத்தத்தில்
காதடைத்த உன் செவிக்குள்
நுழைய முடியாமல்
ஆகாசத்திலிருந்து கீழே விழும்
காதுகூசி வெட்கிச்சாவர்
அப்பிணங்களுக்கோ நீ
பொய்க்கால் குதிரை
உயிர்த்த உனக்கோ- நீ
பறக்கும் குதிரை-“A Pegasus”