வாழ்க்கை பாடம்
வாழ்க்கை பாடம்


மனம் கவர்ந்து நீக்கமற நிறைந்த தமிழே!
காவியமேவிய ஓவியமே!
ஒளடதம் காணா
நோயொன்று எமை
வீட்டுக்குள் கட்டுப்பாடு பூட்டு இட!
கூட்டுக்குள் சிறைபட்ட
குருவிகள் போலானோம்!
கற்றது பல பாடம்!
கலைந்தது பலபல வேடம்!
மெளனமாய் இடைப்பட்ட பொழுதுகளில் எல்லாம்
எம் தமிழின் குரல்
கேட்டுக்கொண்டே இருப்பதை
உணர்ந்தேன்!
நான் என் தமிழ் மனையின் நாய்க்குட்டி!
அன்பிலும் உணவிலும்
ருசிகண்ட செல்லப்பிராணி போல...
மேலும் செழுமையாய் வளர
தமிழை சுற்றிக்கொண்டு
இருப்பதே வாங்கிய வரம்!
இன்றய சமூகஇடைவெளி
உலகியல் தொற்றின் தீண்டாமை!
இனம்!
நிறம்!
மதம்!
என எதை சார்ந்தும்
இழைக்கப்பட வேண்டிய
அநீதி அல்ல!
நோய்பரவலை தடுக்கும் முறை!
அவ்வளவே என்பதை
உலகமே நீ ஏற்றுக்கொண்டாயோ!
உனர்வாயோ!
தனி மனிதனை தொடுவதில்
இருப்பதாக சாடிய தீட்டு!
இழைத்த கொடுமைகளின்
சாபமோ! பலனோ!
வினாவோ! விடையோ!
தன்னை தீண்ட
முன்னெச்சரிக்கை நடவடிக்கை!
நகைப்பதா! பகைப்பதா!
சமூக இடைவெளி!
நெல்லுக்கு நண்டோட!
வாழைக்கு வண்டியோட!
தென்னைக்கு தேரோட!
என வாழ வழிகாட்டி
நோய்தொற்று தவிர்த்த
தமிழரின் தாய் பற்று!
இன்று சானிடைசர்களும் முககவசமும் நம் புதிய உறவுகள்!
இவையின்றி நிம்மதி பெருமூச்சில்லை!
இதுவே நிலை!
நீரின்றி அமையாது உலகு!
யாரின்றியும் இருக்க பழகு!
புறந்தூய்மை நீரால் அமையும்!
மறுந்தாய்வு யாரால் முடியும்!
கந்தையானாலும் கசக்கிக்கட்டு!
தந்தையானாலும் நெருங்க விடாது கொரொனா தொற்று!
அனைத்தையும் விலை பேசிவிடலாம்
எனும் ஆணவமிக்க உலகே!
உடம்பார் அழியின்
உயிரார் அழிவர்
எனும் திருமந்திரம் ஒலித்துக்கொண்டே இருக்கட்டும்
விருந்தும் மருந்து!
கபசுர குடிநீர் அருந்து!
நோய் நாடி நோய் முதல் நாடி
அதுதணிக்கும் வாய் நாடி.....
என்றதே எம் உலகப்பொதுமறை!
இதுவரை எதிர்கொண்டதிலேயே
இதுவே பெறுந்தொற்று
இயல்பு நிலை
திரும்பாமலே போகலாம்!
என எச்சரிக்கும் உலக சுகாதார நிலையம்!
வேலையில்லா நாட்களிலும்
கிடுகிடுவென விரைந்தேறும்
சொர்ண விலை இன்னும் வேடிக்கை!
வாழவேண்டும் என்ற நம்பிக்கைநதி
சிலபல கலக்கங்களோடு தேங்கிநிற்கிறது!
தற்கொல்லியை முற்கொன்ற குண்டலகேசி நினைவில் வருகிறாள்!
நம் கொரொனா வதம்!
கையில் அட்சயபாத்திரமேந்தி!
ஒருகோடி காயசண்டிகை ...
மணிமேகலையிலிருந்து!
வந்தார்களோ இப்பெரும்பிணி போக்கிடும் பணி செய்ய
நம் மருத்துவரும் செவிலியரும்!
பெறுந்தொற்றை விட்டொழிய
வேண்டி நிற்கும் கோடான கோடி
நெஞ்சங்களில் நானும் ஒருத்தி!