நல்வாழ்த்து ஒன்றைக் கூறிச் சென்றிடு
நல்வாழ்த்து ஒன்றைக் கூறிச் சென்றிடு


புது வரவு புது உறவு
நீ எப்படி இருப்பாய்?
நீ என்ன செய்யப் போகிறாய்?
எத்தனை எதிர்பார்ப்புகள்..
எத்தனை மகிழ்ச்சிகள்...
எத்தனை ஆவல்
ஆர்வத்தோடு உன்னை வரவேற்றேன்!
எனை விட்டு நீ
நீங்கும் வேளையில்....
சற்றே சிந்தனையில் ஆழ்கிறேன்!
உன்னால் உயிர் வாழ்கிறேன்!
உள்ளபடியே சிரம் தாழ்கிறேன்!
போராட்டம் இல்லாமல் நான் இல்லை
போராடாத நாள் இல்லை !
பல வலிகளைத் தந்தாய்!
ஆயினும் எதிர் கொள்ள
வலிமையைத் தந்தாய்!
என்னோடே நீ வந்தாய்!
கண்ணாய் எனைக் காத்தாய்!
என்னை விட்டு நீ
அகன்று சென்றாலும்
உன் நினைவுகள்
எனை விட்டு அகலாது!
365 நாட்களும்
365 மணித்துளிகளாய்...
கண்ணிமைக்கும்
கண நேரமாய்....
மறைந்தே போனது!
கரைந்தே போனது!
காலங்
கள் கானல் நீராய்
காணாது போனாலும்
காலச் சுவடுகள்
நினைவை விட்டு நீங்குவதில்லை!
சில வடுக்களாய்
சில காவியங்களாய்
பல அழகு ஓவியங்களாய்!
அமைதியாய் அழகாய்
பலமாய் கலமாய் நின்றாய்!
பயனாய் பாடமாய் நின்றாய்!
கலங்கரை விளக்கமாய்
எனைக் கரை சேர்த்தாய்!
வலக்கரமாய் எனக்கு
வலு சேர்த்தாய்!
நன்றி!!! நன்றி!!
சென்று வா....
வாழ்க்கைப் பயணத்தில்
நான் கண்ட பல நல்ல காட்சிகளோடு..
உன்னைக் கடந்து செல்கிறேன்!
நீ தந்த வெற்றிகளை
சுமந்து செல்கிறேன்!
நீ கொடுத்த நம்பிக்கையில்
அடுத்த அடி வைக்கிறேன்!
வாழ்க்கைப் பயணத்தில்
தொடர்ந்து பயணித்திட
பயணத்திட்டம்
வெற்றியாய் அமைந்திட
நல்வாழ்த்து ஒன்றை
கூறிச் சென்றிடு!