STORYMIRROR

Uma Subramanian

Inspirational

4  

Uma Subramanian

Inspirational

ஏது இணையடி?

ஏது இணையடி?

1 min
251

என் தந்தை விதைத்த 

ஆயிரம் ஆயிரம் 

விந்துக்களில்

முந்தி வந்த விந்து

அண்டத்தோடு சேர

 உன் புந்தி வளர 

 ஈரைந்து மாதங்கள்

 கருவாய் எனைச் சுமந்து 

மசக்கையினால் உணவு கசந்து

வாந்தி மயக்கத்தினால் 

உடல் மெலிந்து 

பகல் இரவாய் தூக்கம் மறந்து 

சுக துக்கம் துறந்து

கருப்பை வாய் திறக்க

உதிரமெல்லாம் நீ இழந்து 

உடலெல்லாம் வலி வந்து 

அனலிலிட்ட புழுவாய் நீ 

பதறி துடித்து

கதறி அழுது 

காப்பாற்று என

கடவுள்களிடம் கரம் உயர்த்தி...

உருவாய் நான் பிறக்க

உன் இடை தளர்த்தி

மெல்ல எனை புறம் தள்ளி 

ஆசையாய் கையில் அள்ளி 

உச்சி முகர்ந்து 

உன் மார்பில்

 எனைச் சேர்த்து 

உன் உதிரத்தை பாலாய் தந்து 

உன் கரத்தை உத்திரமாக்கி

உன் உடலை என் கூடாக்கி 

உன் முந்தியை என் பாயாக்கி

 உன் கண்ணிரண்டை

என் காவலாக்கி

உன் கண்மணியாய்

எனைக் காத்து  

நாளெல்லாம் எனைப் பார்த்து 

இச்சை அடக்கி 

பச்சை விரதமிருந்து

நான் போகும் இடமெல்லாம் நிழலாய் நீ வந்து 

உன் கனவை தகர்த்து 

என் கனவை வளர்த்து 

என் வெற்றியில் எல்லாம் 

உன் மேனி சிலிர்த்து 

என் நெற்றியில் நாளும் நாளும் உன் இதழ் பதித்து 

வெற்றித் திலகமிட்டு

சற்றும் சளைக்காது

சக்கரமாய் நீ சுழன்று

நான் நடக்க வேண்டிய 

பாதையை நீ நடந்து காட்டி...

மலராய் எனைப் போர்த்தி... 

நேர்த்தியாய் எனை உயர்த்தி...

உன் கடமையெல்லாம் ஆற்றி... 

நடை தளர்ந்து போனாய்!

ஆயின்.... 

உன் அன்பு தளரவில்லை!

உன் விரல் எனைத் தொட்டதில்லை!

உன் குரல் எனைச் சுட்டதில்லை! 

முழுத்திங்களாய் உன் பாசம்!

இளந்தென்றலாய் உன் நேசம்!

ஊர் நாவெல்லாம் 

உமது கதை பேசும்!

அதில் மலரின் சுகந்தமாய்

 உம் புகழ் வீசும்!  

உனை நினைத்துப் பார்க்கிறேன்....

மலையாய் நீ நிற்க!

விலை என்ன கொடுக்க?

மெய் சிலிர்த்து 

சிலையாய் நான் நிற்க!

உம் பாச அலை அடித்து இழுக்க!

வாழும் சொர்க்கமாய் 

உன் மடி!

இதற்கு ஏது இணையடி?

மெய் மறந்தேன் நானடி!

நாளும் நாளும் 

நாடித் தேடி ஓடி வருவேன் உன்னடி!

உன்னை மிஞ்சிட யாரடி? 

நீ... நீயே.... 

அன்பின் எல்லையடி!

தன்னிகரற்ற ஒப்பில்லா அன்னையர்களுக்கு இந்த வரிகள்....

எனது அர்ப்பணம்! 

அன்பே எனது சமர்ப்பணம்! 

💐💐💐💐💐💐🙏


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational