Uma Subramanian

Inspirational

5  

Uma Subramanian

Inspirational

செந்தாமரை!

செந்தாமரை!

1 min
666


*உன் புந்தியின் புரையோடிய புண்கள்...

உன் நைந்து போன குரல் நாண்கள்...

உன் உறங்கா இரு கண்கள்... 

இந்த சமூகத்திற்கு தெரிவதில்லை!

ஆம் வேர்கள் கூட 

வெளியே தெரிவதில்லை!

வேர்கள் நீங்கினால்

உயிர்கள் வாழ்வதில்லை!

தாங்கி நிற்கிறேன்....

தற்பெருமை கொண்டதில்லை! 

தண்டுகளிடம் கைம்மாறு கண்டதில்லை! 

கள்ளம் கபடமில்லா உள்ளங்கள் உனது!

கரைபடியா கரங்கள் உனது!

வஞ்சம் இல்லா நெஞ்சம் உனது!

வையகத்தை வளப்படுத்திடும் ஆற்றல் உனது!

உனை தூற்றுவோரையும் வாழ்த்திடும் மனது உனது! 

 வெள்ளமென வேதனைகள் வந்திடினும்... 

சொல்லொண்ணா 

சோதனைகள் அழுத்திடினும்

கலங்கி நிற்காதே...

பின் இந்த வையம் நிற்காதே.. 

அறிவு எனும் உளி கொண்டு 

உன் குரல் எனும் சமட்டியால் தட்டி எழுப்பு!

காற்றிலே மிதந்து வரும் அறிவுத் திவலைகள்... 

வான்மழையாய் பொழியட்டும்! 

அறியாமை எனும் ஆசு...

ஆற்றிலே வெள்ளமாய் அடித்துச் செல்லட்டும்! 

ஆகாரம் இல்லையெனினும்

இந்த சமூகத்தில் ஆதாரம் இல்லையெனினும்

சேதாரம் இல்லாமல் 

தாராளமாய் 

உயிருள்ள வரை 

அறிவை அள்ளி வழங்குவோம்!

ஆற்றலை வழங்குவோம்!

செய்யும் தொழில் ஒன்றையே வணங்குவோம்!

சேற்றிலே இருந்தாலும்

 தூய செந்தாமரையாய் மலர்ந்திடுவோம்! 

செந்தாமரை சூடிக் கொள்ளும் மலரல்ல!

பூஜைக்கு உரிய மலர்!

பூஜைக்கு உரிய நாம்

சில தவறான அர்ச்சனைகளாலும்

ஆராதிக்கத்தான் படுகிறோம்!  

கடவுள்களைத் திட்டாத மனிதன் யார்? 

கலங்காமல் தொடர்ந்து பாடுகள் படுவோம்! 

இந்த அகிலம் செழிக்க!

களைகளை களைந்திடுவோம்....

நம் பல் கலைகளால்!

இந்த தரணி தழைக்க!

 *அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!



రచనకు రేటింగ్ ఇవ్వండి
లాగిన్