இது கலவியின் கதை
இது கலவியின் கதை


கலவி இயற்கையின் தேடல்
இருவேறு சக்தியின் கூடல்
அது உள்ளுணர்வின் தீண்டல்
புது உயிரினத்தின் விதைநெல்
ஆண்பெண் புலன்கள் வேறுபட்டது
அதன் நோக்கம் ஒன்றுபட்டது
சுரப்பிகள் தாக்கம் வேறுபட்டது
இனப் பெருக்கம் ஒன்றுபட்டது
களமென பெண் இருக்க
விதையென ஆண் இருக்க
உரமென உடலமைப்பிருக்க
பயிரென உயிர் முளைக்கும்
கலந்தது மரபணுவின் குணம்
பிறந்தது ஆறறிவுள்ள இனம்
வளர்ந்தது நித்தமும் பரிணாமம்
செழித்தது பல்லுயிரால் பூலோகம்.
-இது கலவி கல்வி உரைத்த கதை!
உன் உச்சந்தலை வகுடில்
நடக்க விடு என்னை
விழிகளில் நீச்சல் அடித்து
இதழ்கரையைத் தீண்டும் போது
மூக்கின் நாசி வழியே
என் சுவாசக் காற்று
நான் நுழையாத செவிக்குழாய்கள்
அணலாகக் கொதி கொதிக்க
பொங்கியது இரு பால்குடங்கள்
பசியாறி இளைப்பாற அந்த
சிற்றிடையில் சுருண்டு விட
சற்றே தவறி விழுந்தேன்
சிறு யோனிப் பொந்திற்குள்
பனிக்கால உறக்கம் பத்துமாதம்
கண் விழித்துப் பார்க்கையில்
என்னைப் போல் ஒருவன்
உன் இரு தண்டவாள
கால்களுக்கு இடையில் சிரித்து
புதியதாய்ஓர் வாழ்வைத் தேடி
>
நான் மட்டும் இன்னும்
உன் பாத ரேகையில்
தொலைந்த வழியைத் தேடி!
-இது கலவி கலை உரைக்கின்ற கதை
புல்லும் புழுவும்
கூடப் புணர்ந்திடும்
மனிதப் புணர்ச்சிக்கு
அதிலோர் சிறப்பிடம்
உற்ற துணையைத்
தேர்ந்தெடுத்திடும்
துணையின் தேவை
அறிந்து புணர்ந்திடும்
உடலும் உடலும்
பிறனை மதித்திடும்
இடமும் காலமும்
உணர்ந்து புணர்ந்திடும்
உறவுகள் காத்து
உணர்வை அடக்கிடும்
வரையறை வகுத்து
பண்புடன் புணர்ந்திடும்
அன்புடன் புணர்ந்தால்
மனிதம் பெருகிடும்
வன்முறைப் புணர்தல்
மனிதத்தைப் புதைத்திடும்!
-இது கலவி கலாச்சாரம் உரைக்கும் கதை!
மறைத்துப் பேச
கலவி விரசம் இல்லை
மகத்துவம் பாட
அது புனிதமும் இல்லை
பசிபோல உறக்கம்போல
அதுவும் ஓர் தேவை
மனிதனாய் மனிதன்வாழ
அதுவும் கூட தேவை
கல்வி, கலை, கலாச்சாரம்
மூன்றும் மனிதத்தின் அச்சாரம்
பாலியல் கல்வியுரைக்கும் சமாச்சாரம்
செய்திடு உலகெங்கும் பிரச்சாரம்
வேண்டாம் பாலியல் பலாத்காரம்
பண்புடன் புணர்தல் சிங்காரம்!!