நெற்களத்தின் போர்க்களம்
நெற்களத்தின் போர்க்களம்


சுடும் வெயிலில் உழைத்து உதிர்ந்த
உழவனின் வியர்வைத் துளி; இன்று
கடும் குளிரில் கண்ணீராய் உறைகிறதே! அவன்
படும் பாடு அறியாமல் பகட்டாய்
சுற்றும் பண முதலாளி;
இடும் சட்டம் கூட
பெருநிறுவன மேலாண்மைக்கு சாதகமாய்
பெருநன்மை வேளாண்மைக்கு பாதகமாய்..
..!
'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' என்ற
வள்ளுவரின் வாக்கைக் காக்க மறந்தோம்
இயற்கை சீற்றங்களும் சுற்றுச்சூழல் மாற்றங்களும்
நெடுநாள் உழைப்பை நொடியில் பாழாக்க
கடன் வாங்கி நம் வயிற்றை நிறைத்து
தான் பட்டினியாய் தவித்து
வட்டி கட்ட முடியாமல் வங்கிகள் நெருக்க
கெட்ட வார்த்தைகளைத் தன்மானம் வெறுக்க
அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடந்த விவசாயியின் தற்கொலை
நாம் சமூகமாய் நடத்திய விவசாயத்தின் கொலை..!
'தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை
எனில் ஜகத்தினை அழித்திடுவோம்'
என்று கர்ஜித்தானே பாரதி..
சக மனிதனுக்கு உணவளிக்க
உழன்று உழைத்த உழவன்
உண்ணாமல் உறங்காமல்
உயிர்ப்போக உக்கிரமாய்
உரைக்கிறான் தன் கோரிக்கையை..
உண்மையை ஊக்குவிக்கா ஊடகங்கள் வெட்கக்கேடு..!
உளறுகிறான் என்பது போல் சித்தரிப்பது சாபக்கேடு..!!
'நீ சோற்றில் கை வைக்க விவசாயி
சேற்றில் கால் வைப்பான்'
என்று வெள்ளித்திரையில் கண் துடிக்க
நரம்பு புடைக்க கதாநாயகன் கதைத்த
வசனத்திற்கு விசில் அடித்தாயே..
அவ்வார்த்தைகளை உரைத்தவனுக்கா?
அவ்வார்த்தைகளாய் உழைத்தவனுக்கா?
அடுத்தவேளை நீ உண்ணும் உணவு
உன் தொண்டைக்குழியை தொடுமுன்
உன் மனசாட்சியைத் தொட்டு பார்
உன்னை மண்டியிட்டுக் கேட்கும்
'நீ கணினி முன் களைப்புற்று இருக்கிறாயோ
இல்லை களிப்புற்று இருக்கிறாயோ,
உன் தலைமுறையினர் தழைத்தோங்க
தலைநகரில் போராடுபவன் வழி துணை நிற்பாய்' என்று..
விவசாயம் இந்தியாவின் முதுகெலும்பு..
கூனிக்குறுகி நிற்கும் பாரதத்தாயை
பெருமையுடன் தலைநிமிரச் செய்வோம்!